தர்மபுரி, செப்.26: தர்மபுரியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் வழங்கினார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 549 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கூட்டத்தில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் 5-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, காப்பீட்டு திட்டத்தின் கீழ், சிறப்பாக சிகிச்சையளித்த 2 அரசு மருத்துவமனைகள் மற்றும் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு பாரட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் 10 பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் வழங்கினார். சிறப்பாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டி, கேடயம் வழங்கியதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தியை தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் குழு நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றனர். கூட்டத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, தனித்துணை கலெக்டர் நசீர் இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மரியம் ரெஜினா, பழங்குடியினர் நல அலுவலர் கண்ணன், உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post 10 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள் appeared first on Dinakaran.
