×

திருப்பதியில் பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வெள்ளத்தில் மகா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்வசத்தின் 8வது நாளான நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வலம் வந்து அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அருள் பாலித்தனர். பிரமோற்சவத்தின் 8வது நாளான நேற்று காலை மகா தேரோட்டம் நடைபெற்றது. தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. அப்போது ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற பக்தி முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க மலையப்பசுவாமி மாட வீதியில் அசைந்தாடியபடி பவனி வந்தார்.

அப்போது சுவாமியின் உற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்ற நம்பிக்கையுடன் நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி தரிசனம் செய்தனர். மேலும் தேரோட்டத்தின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய நடனங்களை ஆடியபடி வந்தனர். தொடர்ந்து நேற்று மாலை கல்கி அவதாரமாக குதிரை வாகனத்தில் மலையப்பசுவாமி மாடவீதிகளில் மேளதாளம் முழங்க வீ உலா வந்தார். முன்னதாக பல்வேறு கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பிரமோற்சவத்தின் கடைசி நாளான இன்று மலையப்ப சுவாமி, தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் பால், தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு திருமஞ்சனம் நிகழ்ச்சி வராக சுவாமி சன்னதி முன்பு ஏழுமலையான் கோயில் தெப்பகுளம் அருகே நடைபெறுகிறது. தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்பட உள்ளது. அத்துடன் இரவு பிரமோற்சவ கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நவராத்திரி பிரமோற்சவம் அடுத்த மாதம் 15ம் தேதி தொடங்கி 23 வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருப்பதியில் பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வெள்ளத்தில் மகா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Brahmotsavam ,Eyumalayan temple ,Tirumala ,Tirupati Eyumalaiyan ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் வேருடன் சாய்ந்த மரம்