×

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீரென நுழைவதற்கு காரணம் என்ன?.ஜெயக்குமாரிடம் நீதிபதி கேள்வி


விழுப்புரம்: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்டவர்கள் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முக்கிய சாட்சியான புகார்தாரரான அப்போதைய வானூர் தாசில்தார் குமாரபாலன் உள்ளிட்டவர்கள் அந்த காலக்கட்டத்தில் (அதிமுக ஆட்சியில்) உயர் அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக புகார் அளித்ததாக பிறழ்சாட்சியம் அளித்தனர். இதனிடையே இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அரசு தரப்புக்கு உதவியாக தங்களையும் வழக்கில் சேர்க்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேற்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வக்கீல்களுடன் ஆஜரானார். தொடர்ந்து ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து வாதம் நடைபெற்றது. அப்போது நீதிபதி பூர்ணிமா, ‘கடந்த 10 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்பாக எந்தவொரு புகாரும் கொடுக்காத நிலையில், திடீரென இந்த வழக்கில் நீங்கள் நுழைவதற்கு காரணம் என்ன’ என கேள்வி எழுப்பினார். இதற்கு வக்கீல்கள் சட்டவிதிகளை தெரிவித்து பதிலளித்தனர். தொடர்ந்து ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்த முடிவை வரும் 3ம் தேதி அறிவிப்பதாக கூறி விசாரணைையை நீதிபதி பூர்ணிமா ஒத்திவைத்தார்.

The post அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் திடீரென நுழைவதற்கு காரணம் என்ன?.ஜெயக்குமாரிடம் நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Jayakumar ,Villupuram ,Tamil Nadu ,Higher ,Education ,Gauthamasikamani ,Semman ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...