×

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு மாஜிஸ்திரேட் சாட்சியம்

மதுரை: சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை இன்று (செப். 26) மீண்டும் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். காவல் நிலையத்தில் அவர்கள் இருவரையும் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து சிபிஐ இரட்டைக்கொலை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் 9 போலீசாரை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பெண் போலீஸ் ரேவதி, பியூலா உள்பட பல்வேறு முக்கிய சாட்சிகள் ஆஜராகி, தங்களது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில் இந்த இரட்டைக்கொலை வழக்கை நீதித்துறை சார்பில் விசாரித்த அப்போதைய கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், நேற்று மதுரை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி தமிழரசி முன்பு ஆஜரானார். அவர் இந்த இரட்டை கொலை வழக்கில் தனது விசாரணை குறித்து சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை இன்றைய தேதிக்கு (செப். 26) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு மாஜிஸ்திரேட் சாட்சியம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Double ,Murder ,Magistrate ,Madurai ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா