×

சென்னை காவல் நிலையத்தில் குண்டு வைத்த வழக்கு கோவையை சேர்ந்தவரின் வீட்டில் ‘தலைமறைவு குற்றவாளி’ நோட்டீஸ்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னை வேப்பேரி காவல் நிலைய சுற்றுச்சுவரை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில், கோவையை சேர்ந்தவர் வீட்டில், தலைமறைவு குற்றவாளி என சிபிசிஐடி போலீசார் நேற்று நோட்டீஸ் ஒட்டினர். கோவை செல்வபுரம் கல்லாமேடு மட்டசாலையை சேர்ந்தவர் அயூப் (எ) அஷ்ரப் அலி (47). இவர் மீது, கடந்த 1997ம் ஆண்டு சென்னை வேப்பேரி காவல் நிலைய சுற்றுச்சுவரை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கு உள்ளது.

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஷ்ரப் அலி தொடர்ந்து பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று சிபிசிஐடி போலீசார் 5 பேர் சென்னையில் இருந்து கோவைக்கு சென்றனர். அங்கு, செல்வபுரம் பகுதியில் பூட்டிக்கிடந்த அவரது வீட்டின் சுவரில் ‘தலைமறைவு குற்றவாளி’ என புகைப்படத்துடன் கூடிய நோட்டீஸ் ஒட்டினர். மேலும் அவர் குறித்து கல்லாமேடு பகுதியில் 10க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் போஸ்டர் ஒட்டியும், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் தலைமறைவு குற்றவாளி என அறிவிப்பும் வெளியிட்டனர்.

இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், ‘‘பிடிவாரன்ட் அளிக்கப்பட்டும், தலைமறைவாக உள்ள அஷ்ரப் அலி, வருகிற 16.10.23 காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர் குறித்து தகவல் தெரிந்தால் போலீசில் தெரிவிப்பவரின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்படும்,’’ என்றனர்.

The post சென்னை காவல் நிலையத்தில் குண்டு வைத்த வழக்கு கோவையை சேர்ந்தவரின் வீட்டில் ‘தலைமறைவு குற்றவாளி’ நோட்டீஸ்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai police station ,Cova ,CPCIT ,Chennai ,Chennai Vaperi police station ,Chennai Vaperi ,station ,CPCID ,
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை