×

பிரம்மோற்சவ 8ம் நாளான இன்று திருப்பதியில் மகா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்றுகாலை மகா தேரோட்டம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்பசுவாமி மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி நேற்றிரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடந்தது. 8ம் நாளான இன்று காலை மகா தேரோட்டம் நடந்தது. தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.

பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க மலையப்பசுவாமி மாட வீதியில் அசைந்தாடியபடி பவனி வந்தார். அப்போது நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி காட்டி தரிசனம் செய்தனர். மேலும் தேரோட்டத்தின்போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோலாட்டம், பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய நடனங்களை ஆடியபடி வந்தனர். இன்றிரவு கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதை விளக்கும் வகையில் பாயும் தங்க குதிரை மீது மலையப்பசுவாமி கல்கி அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளார்.

மகா அலங்காரம்

பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான நேற்று மதியம் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமஞ்சனம் நடந்தது. இதில் சுவாமி, தாயாருக்கு வண்ணக்கற்களால் ஆன கண்ணாடி மாலைகள், வெட்டிவேர், குறுவேர், அத்திப்பழம், முந்திரி-பாதாம்-திராட்சைகள், ரோஜா இதழ்கள், முத்துமணி மாலைகள், கிரீடங்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த மாலைகளை தமிழகத்தில் உள்ள திருப்பூரைச் சேர்ந்த ராஜேந்திரன், சண்முகம், பாலு ஆகியோர் இணைந்து பிரத்தியேகமாக தயாரித்து கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரம்மோற்சவ 8ம் நாளான இன்று திருப்பதியில் மகா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupathi ,Brahmmoresava ,Tirumalai ,Brahmoorsavam ,Tirupati Etemalayan Temple ,Brahmoreshava ,Tirupati ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...