×

பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை மூன்று அரண்களால் சூழப்பட்டது

தமிழ்நாட்டில் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. (14மைல்) தொலைவில் வடக்கே அமைந்துள்ளது ரஞ்சன்குடி கோட்டை. இது மாநிலத்தின் தலைநகர் சென்னையிலிருந்து 253 கி.மீ. (157மைல்) தொலைவிலும் திருச்சியிலிருந்து 70 கி.மீ. (43மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது தான் ரஞ்சன்குடி கோட்டை மற்றும் கோட்டையில் அமைந்துள்ள கோயில்கள் என்று சொல்லப்படுகிறது. பின்னர் இது 17ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப்பால் ஆக்கிரமிக்கப்பட்டது.1751ம் ஆண்டில் வாலிகொண்டா போரின்போது ரஞ்சன்குடி கோட்டையானது போர் மையமாக இருந்துள்ளது. அப்போது பிரஞ்சு படைவீர்ர்களின் ஆதரவுடன் இருந்த சந்தா சாஹிப் என்பவரை பிரிட்டிஷ் படைவீரர்களின் ஆதரவோடு இருந்த முகமது அலி என்பவர் எதிர்த்து வெற்றிபெற்றார்.

இந்த கோட்டையை ரஞ்சன்குடி கோட்டை என்றும் நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். சிவன் மற்றும் ஹனுமானுக்காக அர்ப்பணஞ்செய்த இந்துக் கோயில்களின் பழைய வளாகங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. பிரஞ்சு படையானது சந்தா சாஹிப் என்பவருக்கும், பிரிட்டிஷ் படையானது முகமது அலி என்பவருக்கும் ஆதரவு அளித்தனர். அருகே அமைந்துள்ள கிராமமான வாலிகொண்டாவிற்கு போரை அழைத்திருந்தாலும், கோட்டையில் போரிடப்பட்டது. தொடக்கத்தில் பிரஞ்சு படை வெற்றி வாகை சூடியது. ஆனால் முடிவில் உள்ளூர் முஸ்லிம்கள் உதவியுடன் பிரிட்ஷ் படையானது வெற்றிவாகை சூடி போரை முடிவிற்குக் கொண்டு வந்தது.

இந்தக் கோட்டையானது நீள்வட்டமாகவும் அரைகோள வடிவில் அமைந்துள்ளது. வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டை ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. முக்கிய பாதுகாப்பு அரண், கோட்டையின் அடிப்பாகம் மண் சுவரினால் சூழப்பட்டுள்ளது. படிகளின் வழியாக பேட்டை எனப்படும் திறந்தவெளி போர்களத்திற்கு செல்லும் அமைப்பு இருந்தது. மேல் அடுக்குக் கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது. இது பீரங்கி தளம் மற்றும் சிப்பாய்கள் உதவியுடன் பாதுகாப்பு கோபுரமாகவும் அமைந்திருந்தது. கோட்டையில் உள்ள சிறிய நீரமைப்பானது நவாபின் நீச்சல் குளமாக இருந்துள்ளது. கோட்டையில் ஒரு அரண்மனை, குடியிருப்பு பகுதி, சுரங்க அறைகள், பேட்டை மற்றும் கோட்டை மேடு பகுதிகளை இணைப்பதற்கான சுரங்கப்பாதை ஒன்றும் இருந்தது. கோட்டையின் மையப்பகுதியில் அமைந்த ஒரு குழியானது ஆண் கைதிகளுக்கான சிறைச் சாலையாகவும், கோட்டையின் உள்ளே அமைந்த சிறிய அறைகளைக் கொண்ட சிறைச்சாலையானது பெண்களுக்கான சிறையாகவும் இருந்தது.தற்சமயம் இந்தியாவின் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தினால் இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பெரம்பலூரின் சுற்றுலாக்தலங்களில் முக்கியமான ஒன்றாகவும் உள்ளது.

 

The post பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை மூன்று அரண்களால் சூழப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Perambalur Ranjankudi Fort ,Perambalur ,Tamil Nadu cm ,Ranjankudi Fort ,Chennai ,Perambalur Ranjangundi Fort ,
× RELATED நீராதாரங்களாக விளங்கும் ஆறுகளில்...