×

மதுரையில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் திரண்ட இளைஞர்கள்

*உற்சாகம், சந்தோஷம் கரைபுரண்டது

மதுரை : மதுரையில் நேற்று நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் உற்சாகமும், சந்தோஷமும் கரைபுரண்டது. இருப்பினும் கூட்டம் அதிகமானதால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.சென்னையில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்டோர் சாலையில் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகம் அடைகின்றனர். இதனால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் இந்நிகழ்வில் பங்கேற்கும் பொதுமக்கள் உற்சாகமாக இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் மதுரையிலும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்த முடிவானது.

இதன்படி, மதுரை அண்ணாநகரில் உள்ள 80 அடி ரோட்டில், நேற்று காலை ‘வாவ் மதுரை’ என்ற தலைப்பில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சாலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் கூடி ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படத்தி உற்சாகம் அடைந்தனர். மதுரை மாநகர் மட்டுமின்றி மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்பத்தினருடன் இதில் பங்கேற்றனர்.

இந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்எல்ஏ, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி ெபான்வசந்த், மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், நடிகர் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி துவங்கிய பிறகு அங்கு திரண்டிருந்த மக்களின் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பகுதிகள் பிரிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், ஒரு கட்டத்தில் விலகிச் செல்லக்கூட வழியின்றி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால், போதிய இடவசதியின்றி தள்ளுமுள்ளு அதிகமானது. இதையடுத்து வேறு வழியின்றி நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்தோர் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவி ஒருவர் கூறுகையில், ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக இருந்தது. மனதில் உள்ள கவலைகளை மறந்து உற்சாகம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியை விசாலமான பகுதியில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார்.

The post மதுரையில் நடைபெற்ற ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் திரண்ட இளைஞர்கள் appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை