×

35 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்காடு மலை கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து துவக்கம்

*கலெக்டர் முன் மக்கள் கொண்டாட்டம்

ஏற்காடு : ஏற்காடு அருகே மாரமங்கலம் ஊராட்சி மக்களின் 35 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சாலை வசதி ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ் போக்குவரத்து சேவையை கலெக்டர் துவக்கி வைத்தார். இதனை கிராம மக்கள் தாரை-தப்பட்டை அடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் 9 கிராம ஊராட்சிகள் உள்ளன. அதில், மாரமங்கலம் ஊராட்சிக்கு போதுமான சாலை வசதிகள் இல்லாததால் ஏற்காட்டிற்கு சுமார் 25 கி.மீ., சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், மாரமங்கலம் ஊராட்சி கிராம மக்கள், தங்களுக்கு இரண்டு மலைகளை இணைக்க கூடிய வகையில். 2.6 கி.மீ., இணைப்புச்சாலை வசதி செய்து கொடுத்தால் 25 கி.மீ., தூரம் என்பது 4 கி.மீ.யாக குறையும் என தெரிவித்து முதல்வர் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளித்தனர். மேலும், கலெக்டர் அலுவலகத்திலும் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

இதுதொடர்பாக கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி), டிஆர்ஓ, நில அளவியல் துறையினர், தாசில்தார், பிடிஓ.,க்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து ₹7.01 கோடி மதிப்பீட்டில் புதிய இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது. மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நார்த்தஞ்சேடு, கொட்டஞ்சேடு, செந்திட்டு, அரங்கம் மற்றும் பெலாக்காடு உள்ளிட்ட 18 கிராமங்கள் பயன்பெறும் வகையில், சாலை பணிகள் முடிவுற்றது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், நேற்று முன்தினம் பஸ் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. நேற்று முறைப்படி பஸ் போக்குவரத்து துவங்கியது. இதன்மூலம் அப்பகுதி மக்களின் 35 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது.

நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்த மலை கிராமத்திற்கு, சாலை வசதி ஏற்படுத்தி தருவதற்கென கூடுதல் கலெக்டர், எஸ்.பி., டிஆர்ஓ, டிஆர்ஓ உள்ளிட்ட அலுவலர்கள் இணைந்து செயல்பட்டு, என்னால் நேரடியாக 3 முறை ஆய்வுகள் மேற்கொண்டு, மழைப்பொழிவு நேரங்களிலும், இந்த மலைப்பாதையில் நடந்து வந்து தொய்வில்லாமல் பணிகள் மேற்கொண்டதால், இக்கிராம மக்களின் 35 ஆண்டுகால கனவு நனவாகி உள்ளது.

இதற்கு கிராம மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இன்றைய தினம், பஸ் வசதி தொடங்கப்பட்டுள்ளதை மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டையுடன் ஆடி, பாடி உற்சாகமாக கொண்டாடி, தமிழ்நாடு அரசிற்கு தங்களது நன்றி தெரிவித்துள்ளனர். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பொது மேலாளர் ஆதப்பன், டிஎஸ்பி அமல அட்வின், துணை மேலாளர்(வணிகம்) கலைவாணன், கோட்ட மேலாளர் கணேஷ், கிளை மேலாளர் பிரபாகரன், தாசில்தார் தாமோதரன், பிடிஓ.,க்கள் அன்புராஜன், குணசேகரன், உதவி செயற்பொறியாளர் சதிஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலை கிராம மக்கள் திரளாக பங்கேற்று, தாரை-தப்பட்டை அடித்து ஆடி, பாடி அரசு பஸ்சுக்கு வரவேற்பளித்னர்.

இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், ‘எனக்கு திருமணமாகி 65 ஆண்டுகளாக இந்த ஊரில் வசித்து வருகிறேன். எனது வாழ்க்கை முடிவதற்குள், சாலை வராதா என ஏங்கிக் கொண்டிருந்தேன். சாலை அமைத்துக் கொடுத்த முதல்வருக்கும், கலெக்டருக்கும் நன்றி,’ என்றார்.

The post 35 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்காடு மலை கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Yercaud hill ,Yercaud ,Maramangalam ,Dinakaran ,
× RELATED ஏற்காடு அண்ணா பூங்காவில் உள்ள அலங்காரங்களில் மலர்கள் புதுப்பிப்பு