அரியலூர் செப் 25: சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படுவதாக கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: டாம்கோ நிறுவனம் மூலம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும், நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 க்கும் மிகாமலும் இருக்க வேண்டும். தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீதம் வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு 3 சதவீதம் வட்டி விகிதத்தில் ஆண்டிற்கு ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது. குடும்ப ஆண்டு வருமானம், ரூ.6,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்யவேண்டும். அத்துடன் சாதி சான்றிதழ்/ பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், உண்மை சான்றிதழ் நகல், மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post சிறுபான்மை மாணவர்களுக்கு கல்விக்கடன் appeared first on Dinakaran.
