போடி, செப். 25: போடி அருகே உள்ள சிலைமலை கிராமத்தை சேர்ந்தவர் பனைமுருகன். சமூக ஆர்வலரான இவர், மழைவளம் பெருக வேண்டி கண்மாய்கள், குளங்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு, மரங்களை உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், இப்பணிகளை நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, கிராம ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிலமலை, நாகலாபுரம், ராசிங்காபுரம், சில்லமரத்துப்பட்டி, கோடாங்கிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் 7500 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. இப்பணியில் நூறுநாள் பணி செய்யும் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப்பணியின்போது, சமூக ஆர்வலர் பனைமுருகன், நூறுநாள் திட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post போடி அருகே 7500 பனை விதைகள் நடல் appeared first on Dinakaran.
