நிலக்கோட்டை, செப். 25: நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த, புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடந்த, மின் அலங்கார தேர்பவனியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நடைபெற்றது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழா பங்குத்தந்தை டேவிட் சகாயராஜ் தலைமையில் மூன்று கால திருப்பலி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை பிரமாண்ட சிறப்பு கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இரவு மின் அலங்கார தேர்பவனி ஊர்வலம் தொடங்கியது. புனித ஆரோக்கிய அன்னை, இருதய ஆண்டவர், மற்றும் உபகார மாதா ஆகியோர் உருவ சிலைகளுடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய சாலைகள் மற்றும் கிராம வீதிகளில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆரோக்கிய அன்னையின் அருள் ஆசி பெற்று சென்றனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post சிலுக்குவார்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா தேர்பவனி appeared first on Dinakaran.
