×

உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 16-0 என வென்று அசத்தல்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தானுடன் மோதிய இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஹாங்சோ ஹாக்கி அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில் தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடிய இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். முதல் 15 நிமிட நேர முடிவில் 2-0 என முன்னிலை வகித்த இந்தியா, அடுத்த 2 குவார்ட்டரிலும் தலா 5 கோல்களை அடித்து ஆதிக்கம் செலுத்தியது.

4வது மற்றும் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் மேலும் 4 கோல்களை திணித்த இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 16-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இந்திய வீரர்கள் வருண் குமார் 4 கோல் (12வது, 36’, 50’, 52வது நிமிடம்), உபாத்யாய் (7வது, 24’ மற்றும் 53வது நிமிடம்), மன்தீப் சிங் (18’, 27’, 28வது நிமிடம்) தலா 3 கோல், சுக்ஜீத் சிங் 2 கோல் (37 மற்றும் 42வது நிமிடம்), அபிஷேக் (17’), ரோகிதாஸ் (38’), ஷம்ஷேர் சிங் (43’), சஞ்சய் (57’) தலா ஒரு கோல் போட்டனர். 3 புள்ளிகளை தட்டிச் சென்ற இந்தியா, அதிக கோல் அடித்த அடிப்படையில் ஏ பிரிவில் முதலிடம் வகிக்கிறது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை சிங்கப்பூர் அணியை சந்திக்கிறது.

The post உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கோல் மழை: 16-0 என வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Uzbekistan ,Hangzhou ,Men's Hockey A Division League ,Asian Games ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...