×

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் கருட சேவை

களக்காடு, செப்.24: திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை விழா நடந்தது. களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். மேலும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பிரசித்திப்பெற்ற இந்த கோயிலில் பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு மற்றும் கருட சேவை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று (23ம் தேதி) காலையில் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சனம், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு உச்சி கால பூஜை, அபிஷேகம், தீபாராதனை இடம்பெற்றது.

இதையடுத்து மாலையில் கருட சேவை நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் தலைமையில் வனத்துறை ஊழியர்களும், ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் திருக்குறுங்குடி, ஏர்வாடி, களக்காடு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஜீயர் மடத்தின் பவர் ஏஜண்ட் பரமசிவன் தலைமையில் மண்டகபடிதாரர்கள் மற்றும் ஜீயர் மடம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

The post புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலில் கருட சேவை appeared first on Dinakaran.

Tags : Tirumalai Nambi Temple ,Tirukurungudi ,Puratasi ,Garuda Seva ,Tirukurungudi Tirumalai Nambi Temple ,Puratasi.… ,Garuda ,Thirukurungudi Tirumalai Nambi Temple ,
× RELATED களக்காட்டில் நாளை முதல் பறவைகள் கணக்கெடுப்பு