×

கலர்புல் நினைவுகளை கண்முன் காட்டும் குட்டி ஜப்பானில் டைரி விற்பனை ‘டர்ர்ர்…’வலைத்தள ஆதிக்கத்தால் கடும் பாதிப்பு, அச்சு தொழிலாளர்கள் குமுறல்


இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறை அறியாத ஒரு அற்புத விஷயங்களுள் டைரியும் ஒன்று. ஒருவர் டைரி எழுதும் பழக்கம் உள்ளவராக இருந்தால், அவரது வாழ்க்கை பயணக்குறிப்பை அதிலிருந்து அறியலாம். வீட்டு விசேஷங்கள், வரவு -செலவுகள், முக்கிய சந்திப்புகள், காதல் சம்பவங்கள், மறக்க முடியாத நினைவுகள், அன்றைய குறிப்புகள் இடம் பெற்றிருக்கும். அந்த டைரி எழுதும் பழக்கம், வலைத்தள புயலின் தாக்கத்தால் வடிவம் இழந்து நிற்கிறது. ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத்தொழில் திகழ்கின்றது.

2024ம் ஆண்டிற்கான டைரிகள் அச்சிடும் பணி நூற்றுக்கணக்கான அச்சகங்களில் இரவு, பகலாக நடந்து வருகிறது. இங்கு தயாராகும் டைரிகள் தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ரூ.100 முதல் ரூ.800 வரை விலையுள்ள டைரிகளும் ரூ.1.200 முதல் ரூ.1,800 வரை விலையுள்ள விஐபி டைரிகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பேப்பர், அட்டை விலை ஓரளவு கட்டுக்குள் இருப்பதாலும் மின் கட்டண உயர்வு காரணமாகவும் டைரிகளின் விலை இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 40 சதவீதம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வருட இறுதியில் கடைகளில் டைரி விற்பனை களை கட்டும். புத்தாண்டின்போது நலம் விரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்து அட்டைகளுடன் டைரியையும் சிலர் பரிசளித்து வந்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக டைரிகளின் விற்பனை சரிந்து வருகிறது. இதனால் சிவகாசியில் டைரி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாழ்த்து அட்டைகளை அச்சிடும் தொழிலை தொலைத்து நிற்கும் சிவகாசி, டைரி உற்பத்தி தொழிலையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான அச்சு தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிவகாசி டைரி தயாரிப்பாளர் அருண் நாகேந்திரன் கூறுகையில், ‘‘2024 புது வருடம் பிறக்க இன்னும் 3 மாதமே இருப்பதால் டைரி உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாட்குறிப்பு, மாதக்குறிப்பு, முக்கிய நிகழ்வுகளை குறிப்பெடுக்கும் விதவிதமான ஆப்கள் கொண்ட செல்போன்கள், சமூக வலைத்தளங்களின் தாக்கம் ஆகியவற்றை முறியடித்து டைரி எழுதும் பழக்கத்தை தூண்ட வைப்பது அச்சுத்தொழிலுக்கு பெரும் சவாலாகத்தான் உள்ளது. எழுதும் பழக்கத்தை தூண்டும் வகையில் புதுவிதமான டைரி தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறோம். டைரி அச்சு தொழில் சிவகாசியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றது’’ என்றார்.

* டைரிகள் பலவிதம்
உணவு குறிப்பு டைரி, அலுவலக டைரி, சம்பள டைரி, பயண டைரி, மருத்துவ டைரி, நடிகர்-நடிகைகளின் கால்ஷீட் டைரி, தன்னிலை விளக்க டைரி, வீட்டு வரவு-செலவு டைரி, பள்ளி டைரி என பலவகையான டைரிகள் உள்ளன. அதில் முக்கியத்துவம் பெற்றது தன்னிலை விளக்க டைரிதான். அதில் தான் அன்றாட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறிக்கப்படுகிறது.

* டைரி பிறந்த கதை
டைரி என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து பிறந்தது. அதற்கு நாள் என்று அர்த்தம். 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ் என்பவர் எழுதிய டைரி குறிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்பிறகுதான் மேலைநாடுகளில் டைரி எழுதும் பழக்கம் தொடங்கியது. சிலர் தாங்கள் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் ரகசிய குறியீடு (கோடுவேர்டு) மூலமும் டைரிகளை எழுதுவது உண்டு. கட்டுரை வடிவிலும், கதை வடிவிலும், கவிதை வடிவிலும் எழுத டைரி பயன்படுத்தப்பட்டது.

* சுகமும், துக்கமும் தாங்கி நிற்கும் நண்பன்
புத்தக வாசிப்பாளர் முருகன் கூறும்போது, ‘‘தினமும் டைரி எழுதும் பழக்கம் இருந்தால் மன அழுத்தம் குறையும் என்று அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழைய நினைவுகளை கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்துவதில் ஒரு புகைப்பட ஆல்பம் போன்று உள்ளது டைரி. நமது வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கி நிற்கும் நண்பனாக இருப்பதும் டைரிதான். எனவே, ஒவ்வொரு புத்தாண்டிலும் புதிய டைரியோடு நமது வாழ்க்கை பயணத்தை தொடங்குவோம். அதில் அழுத்தமாக அன்றாட வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்வதை தொடர்வோம்’’ என்றார்.

* முக்கிய சாட்சி
சமூக ஆர்வலர் செல்லத்துரை கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் டைரிகளை கைகளில் வைத்திருப்பதே ஒரு கவுரவமாக பார்க்கப்பட்டது. நடைமுறை காலங்களில் கூட எந்த ஒரு வழக்காக இருந்தாலும் அதற்கு ஆதாரமாக போலீசாரால் தேடப்படும் ஒரு பொருளாக டைரி இருந்து வருகிறது. அது வழக்கின் முக்கிய சாட்சியாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் ரகசியத்தை அம்பலத்தில் ஏற்ற அது பயன்படுத்தப்படுகிறது. புதுச்சேரியில் பிரெஞ்ச் ஆட்சியின்போது கவர்னர் மாளிகையில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய ஆனந்தரங்க பிள்ளை தினசரி எழுதிய நாட்குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன’’ என்றார்.

The post கலர்புல் நினைவுகளை கண்முன் காட்டும் குட்டி ஜப்பானில் டைரி விற்பனை ‘டர்ர்ர்…’வலைத்தள ஆதிக்கத்தால் கடும் பாதிப்பு, அச்சு தொழிலாளர்கள் குமுறல் appeared first on Dinakaran.

Tags : Japan ,Dinakaran ,
× RELATED மாநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வால்...