×

சர்க்கரை ஆலை தொழிலாளர் நிரந்தரம், ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சர்க்கரை ஆலை தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் நிரந்தரம் கோரிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு உதவுவதற்காக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆன்லைனில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் தினக்கூலி தொழிலாளர்களாக 200 பேர் வேலைபார்த்து வருகிறார்கள். இவர்களில் 115 பேர் சார்பாக கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தினக்கூலி தொழிலாளர் சங்க செயலாளர் ஜெ.ரவீந்திரன் தங்களை நிரந்தரம் செய்யக்கோரியும், தொழில் ஊதியம் வழங்க கோரியும் வேலூர் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தொழிலாளர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து செய்யாறு சர்க்கரை ஆலை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து சர்க்கரை ஆலை மேல் முறையீடு செய்தது. மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சர்க்கரை ஆலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து, செய்யாறு சர்க்கரை ஆலை நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொழிலாளர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.கீதா ஆஜராகி, தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஆலை நிர்வாகத்திடம் உள்ளது. தொழிலாளர்களுக்கு 50 சதவீத சம்பள தொகையை பெற உரிமை உள்ளது என்று வாதிட்டார். சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.பாலரமேஷ் ஆஜராகி, மனுதாரர்கள் சம்பள கணக்கீடு தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அளவீடுகள் முடியும்வரை ஆலை நிர்வாகத்தின் மீது குற்ற வழக்கு தொடர முடியாது என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹாஜா நஸ்ருதீன் ஆஜராகி, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆலை நிர்வாகம் மீது வழக்கு தொடர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற இரு வழக்குகளில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இந்த நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகியிருந்தார்.

அதேபோல், இந்த வழக்கிலும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உதவுவதற்காக தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், நிதித்துறை முதன்மை செயலாளர் டி.உதயசந்திரன், சர்க்கரை ஆணையர் டி.அன்பழகன், விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி ஆகியோர் ஆன்லைன் மூலம் வரும் 25ம் தேதி (நாளை) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இந்த நீதிமன்றம் கோருகிறது என்று உத்தரவிட்டனர்.

The post சர்க்கரை ஆலை தொழிலாளர் நிரந்தரம், ஊதியம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ 4 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜராக வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IAS ,Chennai High Court ,Chennai ,
× RELATED அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த...