
ஜெய்பூர்: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ளனர். அங்கு ஜெய்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டினர். பின்னர் நடந்த மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்காகவே நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் நாட்டின் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு எழுந்ததால், வேறு வழியின்றி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி உள்ளனர்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இன்றே நடைமுறைப்படுத்த முடியும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட பாஜ நினைக்கிறது. மகளிர் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் இடம்பெற்றதால் தான் அது முழுமை அடையும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் அதை செய்வது சாத்தியமில்லை. எந்நேரமும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பற்றி பேசும், அந்த சமூகத்துக்கு மரியாதை தருவதாக கூறும் பிரதமர் மோடி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பயப்படுவது ஏன்? இவ்வாறு தெரிவித்தார்.
*நடிகைகளுக்கு அழைப்பு ஜனாதிபதி புறக்கணிப்பு
மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,’ புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மோடி அழைக்கவில்லை. ராம்நாத் கோவிந்த் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை அழைக்கவில்லை. அதேபோல் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு நடிகைகள் அழைக்கப்பட்டனர். ஆனால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால் அழைக்கப்படவில்லை. இது ஜனாதிபதியை அவமானப்படுத்தும் செயல்’ என்று பேசினார்.
The post மகளிர் இடஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.