×

ஆஸி.யுடன் இன்று 2வது ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு

இந்தூர்: இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 2வது ஒருநாள் போட்டி, இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும் ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ராகுல் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது. 27 ஆண்டுகளாக மொகாலியில் வெல்ல முடியாத ஆஸ்திரேலியாவை நேற்று முன்தினம் முதல் முறையாக வீழ்த்திய இந்தியா, ஐசிசி தரவரிசையிலும் முதலிடத்துக்கு முன்னேறி சாதனை படைத்தது.

ஒரே சமயத்தில் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டியிலும் நம்பர் 1 அணி என்ற சாதனையை நிகழ்த்தும் 2வது அணி என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக, தென் ஆப்ரிக்கா 2012 ஆகஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தது. முக்கிய வீரர்கள் ரோகித், கோஹ்லி, ஹர்திக், அக்சர், குல்தீப் ஆகியோர் இல்லாத நிலையிலும் இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, இன்று நடக்கும் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. மொகாலி தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க ஆஸி.யும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

* இந்தூரில் 2 அணிகளும் இதுவரை ஒரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2017ல் நடந்த அந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

* இந்தூர் கிரிக்கெட் அரங்கில் இதுவரை நடந்த 6 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. அவற்றில் இங்கிலாந்தை 2 முறையும், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளை தலா ஒரு முறையும் சாய்த்துள்ளது.

* இந்தியா: கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் அய்யர், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

* ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்கள்), மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், ஷான் அபாட், கேமரான் கிரீன், மார்னஸ் லாபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் எல்லீஸ், ஜோஷ் ஹேசல்வுட், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸம்பா.

The post ஆஸி.யுடன் இன்று 2வது ஒருநாள் தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Aussies ,Indore ,Australia ,Holkar Stadium ,Dinakaran ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!