×

தலையெழுத்தை மாற்றும்…

இ ந்திய தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு என்னும் சி.ஏ.ஜி ஒன்றிய-மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு-செலவு கணக்குகளை சரிபார்க்கும் அதிகாரம் கொண்டது. இது இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 5ன் கீழ் நிறுவப்பட்டுள்ள ஓர் அதிகார அமைப்பாகும். ஆண்டுதோறும் ஒன்றிய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் முதலில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றம் அதை ஏற்றுக் கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும். குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு அது மீண்டும் அரசுக்கு அனுப்பப்படும். அதில் ஒரு பிரதி சிஏஜிக்கும் அனுப்பப்படும். அதன் பின்னர் அரசின் வரவு-செலவு கணக்குகளை தணிக்கை செய்து ஒரு அறிக்கையை சி.ஏ.ஜி குடியரசுத் தலைவருக்கு அனுப்பும். அதாவது குடியரசுத் தலைவர் கொடுத்த வரவு-செலவு அனுமதி சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதே சி.ஏ.ஜி.,யின் பணி. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான (2023) சி.ஏ.ஜி.யின் அறிக்கையானது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் ஒன்றிய அரசின் பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவுப்பாதை கட்டுமானத்திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தல், ஆயுஷ்மான்பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத்திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத்திட்டம், ஹெச்.ஏ.எல்.,விமான இன்ஜின் வடிவமைப்புத்திட்டம் என்று 7 திட்டங்கள் பிரதானமாக கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் இந்திய நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை என்று பெருமை பேசினர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

ஆனால் இந்த திட்டங்கள் அனைத்திலும் பல்லாயிரம் கோடி ஊழலே பல் இழித்து நிற்பது அம்பலமாகியுள்ளது. பாரத்மாலா திட்டத்தில் ஒதுக்கிய நிதியை தாண்டி பலகோடியில் ஒப்பந்தங்கள், துவாரகா விரைவுச்சாலையில் திட்டச்செலவை மீறி பலகோடி ஒதுக்கீடு, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் விதிமுறைகளை மீறி பயணிகளிடம் பலகோடி வசூல், ஆயுஷ்மான்பாரத் திட்டத்தில் ஒரே அலைபேசி எண்ணைக் கொண்டு 7.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், அயோத்தியா மேம்பாட்டு திட்டத்தில் பலகோடி இழப்பு, பிற திட்டங்களில் குளறுபடிகள், உற்பத்தியில் தாமதம் என்று மெத்தனத்தின் மொத்த வடிவமாக செயல்பட்டுள்ளது ஒன்றிய அரசு.

இந்தவகையில் அயோத்தியா திட்டம் முதல் ஆயுஷ்மான்பாரத் திட்டம் வரை ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக ‘சிஏஜி எழுப்பிய ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடுகளும் பிரதமரின் மவுனமும்’ என்ற தலைப்பில் பாட்காஸ்ட் சீரிசின் 2வது அத்தியாயத்தில் அவர் கூறியுள்ள தகவல்கள், அதிர வைப்பதாக உள்ளது. ஆனாலும் ஒன்றிய ஆட்சியாளர்கள் இது தொடர்பாக வாய் திறக்காதது ‘மவுனம் சம்மதம்’ என்பதற்கு சாட்சியாக நிற்கிறது. ‘இந்தியாவுக்காக பேசுவோம்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆதாரங்களுடன் விடுத்துள்ள அறைகூவலும், இதன் தொடர்ச்சியாக மக்கள் மன்றத்தில் நிறைந்து நிற்கும் எழுச்சியும் எதிர்காலத்தில் இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றும் என்பது நிதர்சனம்.

The post தலையெழுத்தை மாற்றும்… appeared first on Dinakaran.

Tags : CT ,Chief Account Audit System. PA ,Union ,Governments ,Dinakaran ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...