×

நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ரூ4,000 கட்டணம்: அடுத்த மாதம் போக்குவரத்து துவக்கம்

நாகை: சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா நாடுகளுக்கு ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பயணிகள் போக்குவரத்து நடந்து வந்தது. 1980ல் இருந்து இவை அனைத்தும் படிப்படியாக நின்று போனது. 1991ல் எம்.வி. டைபா என்ற கப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே கடைசி ஏற்றுமதியாகும். பாமாயில் மற்றும் தேங்காய் இறக்குமதி நடந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இதுவும் நின்று போனது. எனவே சோழர்கள் காலத்தில் கொடி கட்டி பறந்த நாகை துறைமுகத்தின் பழம் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாகை துறைமுகத்தை மீண்டும் பொலிவு பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வந்தார். இதன்பலனாக டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணில்விக்ரமசிங்கே பிரதமர் மோடியை சந்தித்த போது நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் இயக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக காங்கேசன் துறை துறைமுகத்தை நவீனப்படுத்த ரூ.360 கோடி, நாகை துறைமுகத்தை நவீனப்படுத்த ரூ.3 கோடி ஒன்றிய அரசு வழங்கியது. இதைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தை 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன் துவங்கி நடந்து வருகிறது.

இப்பணியை அண்மையில் தமிழக சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். துறைமுகத்தில் நடந்து வரும் பணிகள் வரும் அக். 2க்குள் முடியும் என்றும் அவர் கூறினார். இதன்பின் அக்டோபர் மாதத்திலேயே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் 2 கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. இப்போதைக்கு சென்னையில் இருந்து அந்தமான் சென்று கொண்டிருக்கும் கப்பல் ஒன்று நாகைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுபற்றி நாகை துறைமுக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அக்டோபரில் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து துவங்கி விடும். இதற்காக ஒரு கப்பல் வருகிறது.

அதில் சுமார் 150 பேர் வரை பயணிக்கலாம். நாகையில் இருந்து இலங்கை செல்ல ஒருவருக்கு கட்டணமாக ரூ.4000 முதல் ரூ.4500 வரை வசூலிக்கப்படலாம். கப்பலில் பயணிக்க பாஸ்போர்ட் அவசியம். நாகையில் இருந்து காலை 10 மணிக்கு கப்பல் புறப்படும். 2.30 மணி நேரத்தில் இலங்கைக்கு சென்று விடும். அதே கப்பல் மாலை 5 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நாகை வரும். கொச்சினில் கட்டப்படும் கப்பல் வந்ததும் அதுவும் இலங்கைக்கு இயக்கப்படும் என்றார்.

இது குறித்து தேசிய மீனவர் பேரவை தேசிய துணைத்தலைவர் குமரவேல் கூறுகையில், பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கினால், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் நாகைக்கு வருவார்கள். இதனால் நாகையில் சுற்றுலா வளர்ச்சி அடையும். இலங்கை – தமிழ்நாடு மீனவர்கள் இடையே 40 ஆண்டு காலமாக நிலவி வரும் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் சம்பவமும் குறையும். ஏனெனில் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் இரண்டு நாட்டை சேர்ந்த மீனவர்களும் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்படும். இதனால் உறவுகள் புதுப்பிக்கப்படும் என்றார்.

The post நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்க ரூ4,000 கட்டணம்: அடுத்த மாதம் போக்குவரத்து துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Nagai ,Sri Lanka ,Tamil Nadu ,Cholas ,Singapore ,Malaysia ,Indonesia ,Dinakaran ,
× RELATED நாகை-காங்கேசன்துறை படகு சேவை மீண்டும் தொடங்கப்படும்