×

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையா?


புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியாவில் 1967ம் ஆண்டு வரை 4 தேர்தல்கள் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. ஆனால் 1968ம் ஆண்டு வாக்கில் சில மாநிலங்களில் அரசுகள் கலைக்கப்பட்டதால், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. மேலும் மக்களவையும் 1970ல் அதன் பதவிக் காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாக கலைக்கப்பட்டதால், 1971ல் இடைக்கால தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை சந்திக்கும் நடைமுறையை அமல்படுத்த முடியவில்லை.

தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் செலவு அதிகரிப்பதுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு ஊழியர்களின் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். 2014ல் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2ம் தேதி ஒன்றிய அரசு குழு அமைத்தது.

இக்குழுவின் உறுப்பினர்களாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.இக்குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் பங்கேற்பார் என்றும், குழுவின் செயலாளராக ஒன்றிய சட்டத் துறை செயலாளர் நிதின் சந்திரா செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த குழுவானது மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்தது.

ஆனால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவில் இடம்பெற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் உயர்நிலைக் கூட்டம் இன்று டெல்லியில் அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், லோக்சபா, சட்டசபைகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் ெதாடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு, மாநிலங்களின் ஒப்புதல் தேவையா? என்பதையும் இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்க உள்ளது. தொங்கு நாடாளுமன்றம் அல்லது சட்டசபை, நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்ற நேரங்களில் எந்த மாதிரியான தீர்வுகள் காணப்படலாம் என்பது குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று கூடுகிறது: அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவையா? appeared first on Dinakaran.

Tags : President ,New Delhi ,Republican ,Ramnath Kovindh ,Dinakaran ,
× RELATED கோடீஸ்வர நண்பர்களுக்கு ₹16 லட்சம் கோடி...