×

திருப்பதி பிரம்மோற்சவ 6வது நாள்; அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி: மாலை தங்க தேரோட்டம்


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் பெரிய சேஷ வாகனத்தில் தொடங்கி சின்ன சேஷ வாகனம், அன்னம், சிம்ம, முத்து பந்தல், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், பல்லக்கு என பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்றிரவு முக்கிய வாகன சேவையான கருட சேவை கோலாகலமாக நடந்தது. மலயைப்ப சுவாமி தங்க, வைர, பச்சை, மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தன் அனுமந்தனை வாகனமாக கொண்டு ராமர் அலங்காரத்தில் மாடவீதியில் பவனி வந்தார். கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாக ராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி வீதிஉலாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பரதநாட்டியம், உள்பட பல்வேறு பாரம்பரிய நடனங்கள் ஆடியும், பல்வேறு சுவாமி வேடம் அணிந்தும் பங்கேற்றனர். இன்று மாலை 4 மணிக்கு 32 அடி உயரமுள்ள பாயும் குதிரையுடன் கூடிய தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி தேவி பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் பவனி வருகிறார். மகா லட்சுமியின் சொரூபமாக பெண்கள் விளங்குவதாலும் தங்கம் என்பது மகாலட்சுமிக்கு உரித்தானது என்பதாலும் பெண்கள் மட்டுமே தங்க ரதத்தை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

இரவு உற்சவத்தில் கஜேந்திர மோட்சத்தில் யானை காப்பாற்றியதை நினைவும் கூரும் விதமாக தன்னை சரணடையும் பக்தர்களை காப்பற்றுவதாக மலையப்பசுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இந்த வீதி உலாவின் போது கோயில் யானைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவில் பங்கேற்கும். இந்த வாகன சேவையில் சுவாமியை தரிசனம் செய்வதால் யானை அளவுள்ள பிரச்சனைகளும் எறும்பாக மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 72,650 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27,410 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ₹3.33 கோடி காணிக்கை செலுத்தியிருந்தனர். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருப்பதி பிரம்மோற்சவ 6வது நாள்; அனுமந்த வாகனத்தில் மலையப்பசுவாமி பவனி: மாலை தங்க தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Brahmmorsava ,Railyapaswami Bhavani ,Tirumalai ,Brahmoarsavam ,Tirupati Ethumalayan Temple ,Tirupati Brahmorsava ,Malayapaswami ,Bhavani ,Dinakaran ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...