×

‘விடியல் பயணம் திட்டம்’ மூலம் சேமிப்பு என்பதை விட பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு

சென்னை: ‘‘விடியல் பயணம் திட்டம்’’ மூலம் மாதந்தோறும் சேமிப்பு என்பதை விட பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழுவின் நான்காவது கூட்டம் தமிழ்நாடு முதல்வரும், மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத் திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் முதன்மை செயலாளர் முருகானந்தம், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை செயலாளர் கோபால், நிதித்துறை செயலாளர் (செலவினம்) நாகராஜன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சீனுவாசன், விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தீனபந்து, சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், அமலோற்பவநாதன், சிவராமன், நர்த்தகி நட்ராஜ், உறுப்பினர் செயலர் சுதா ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட வரைவு கொள்கைகள், தயாரிக்கப்பட்டு வரும் கொள்கைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்களான மகளிருக்கான இலவச நகர பேருந்து பயணத் திட்டமான விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் ஆகியவற்றின் பயன்கள் மகளிர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சென்றடைந்தது தொடர்பான ஆய்வு முடிவுகள் குறித்தும் விளக்கப்பட்டன. மேலும், மாநிலத் திட்டக் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள், நடப்பில் உள்ள ஆய்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு மாநில திட்டக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் மூலம் முக்கிய கொள்கைகளை வகுப்பதற்கு முனைப்புடன் வழிகாட்டுதலை வழங்குகிறது. அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்கு திட்டக்குழு சிறப்பாக செயலாற்றி வருகிறது. அந்தவகையில் மின் வாகன கொள்கை, தொழில் – 4.0 கொள்கை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கொள்கை, துணி நூல் கொள்கை, கைத்தறிக் கொள்கை, சுற்றுலாக் கொள்கை தமிழ்நாடு மருத்துவ உரிமைக் கொள்கை, தமிழ்நாடு பாலின மாறுபாடு உடையோருக்கான நலக் கொள்கை ஆகியவற்றை தயாரித்து நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள்.

கழிவு மேலாண்மை கொள்கை, தமிழ்நாட்டின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை,நீர்வள ஆதாரக் கொள்கை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் கொள்கை, வீட்டு வசதிக் கொள்கை போன்றவற்றையும் விரைந்து இறுதி செய்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதேபோல, நான் மிக முக்கியமாகக் கருதுவது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மக்களுக்கு எந்த வகையில் பயனளித்து வருகிறது என்பது தொடர்பாக நீங்கள் தரும் ஆய்வறிக்கைகள் தான். மகளிருக்கு இலவச விடியல் பயணத் திட்டத்தை நாம் நிறைவேற்றினோம். இந்த திட்டத்தின் மூலமாக பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள், உயர்வுகள் என்னென்ன என்பதை திட்டக் குழு அறிக்கையாகக் கொடுத்த பிறகு தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள் அனைவரையும் சென்றடைந்தது. மாதம் தோறும் ரூ.800 முதல் ரூ.1200 வரை சேமிக்கிறார்கள் என்பதைவிட பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது.

சமூகத்தில் அவர்களது பங்களிப்பு அதிகமாகி இருக்கிறது. வேலைகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதன் மூலமாக சமூக உற்பத்தியும், உழைப்பும் உற்பத்திக் கருவிகளும் அதிகமாகி இருக்கிறது. இவை பற்றி எல்லாம் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக எழுதத் தொடங்கியது. அதேபோல, இல்லம் தேடிக் கல்வி என்பது கல்வியை பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டு வரவும் பயன்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது அனைவருக்கும் சுகாதாரம் என்பதை உறுதி செய்துள்ளது. வீட்டுக்கே அரசு செல்கிறது என்ற நிர்வாகப் பரவலாக்கல் நடந்துள்ளது.

மருத்துவ உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது. மேலும், ‘நான் முதல்வன்’ திட்டமானது தமிழ்நாட்டு மாணவர்களை கல்வியில், அறிவாற்றலில், திறமையில், தன்னம்பிக்கையில் சிறந்தவர்களாக மாற்றி வருகிறது. இதன் மூலம் 13 லட்சம் பேருக்கு இந்தாண்டு பயிற்சி வழங்கி இருக்கிறோம். மிகப்பெரிய பயிற்சி நிறுவனங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கில் பணம் கட்டி அறிந்து கொள்ள வேண்டிய திறமைகளை அரசு கட்டணமின்றி வழங்கி வருகிறது. இதன் மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 183 மாணவர்கள் வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை இன்னும் எப்படி செழுமைப்படுத்தலாம் என நீங்கள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். ‘விடியல் பயணம் திட்டம்’, ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ ஆகியவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது என நீங்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.

அதேபோல, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் தாக்கம் குறித்தும் நீங்கள் அறிக்கை வழங்க வேண்டும். ஒவ்வொரு திட்டத்தின் பயன்பாடு என்பதும் மிகமிக அதிகம். செலவினத்தின் அடிப்படையில் எந்தவொரு திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதை திட்டக்குழு வழிகாட்டி வருகிறது. இது அரசு அதிகாரிகளுக்கும் மிகச் சிறந்த சிந்தனைத் திறப்பாக உள்ளது. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கிடைப்பது எத்தகைய மகிழ்ச்சியை வழங்கி வருகிறது என்பதை ஊடகங்களில் வரும் செய்திகள் மூலமாக அறிகிறேன். அதன்படி, கிராமப்புற ஆய்வில் ஆர்வம் கொண்ட துணைத் தலைவர் பல கோணங்களிலும் ஆராய்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ சமூகத்தில் ஏற்படுத்துகிற தாக்கம் குறித்து அறிக்கைகள் கொடுக்கலாம்.

மேலும், மிக முக்கியமான 2 வேண்டுகோள்களை உங்களிடம் வைக்க விரும்புகிறேன். அதன்படி, பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை, மதிப்பீடு மற்றும் ஆய்வுத்துறை ஆகியவற்றை இணைத்துக் கொண்டு மாநில திட்டக்குழு செயல்படவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருகிறீர்கள். இவற்றை அரசுத் துறைகள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்துகிறதா, பின்பற்றுகிறதா என்ற ஆய்வையும் நீங்கள் செய்ய வேண்டும். புள்ளி விவரங்களாக மட்டுமல்ல கள ஆய்வுகளின் மூலமாகவும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். செலவினத்தின் அடிப்படையில் எந்தவொரு
திட்டத்தையும் அளவிடாமல், பயன்பாட்டின் அடிப்படையில் அளவிட வேண்டும் என்பதை திட்டக்குழு வழிகாட்டி வருகிறது

* இல்லம் தேடிக் கல்வி என்பது கல்வியை பரவலாக்கவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பள்ளிக்குள் கொண்டு வரவும் பயன்பட்டுள்ளது.
* மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் அனைவருக்கும் சுகாதாரம் என்பதை உறுதி செய்துள்ளது. மருத்துவ உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது.
* ‘நான் முதல்வன்’ திட்டம் தமிழ்நாட்டு மாணவர்களை கல்வியில், அறிவாற்றலில், திறமையில், தன்னம்பிக்கையில் சிறந்தவர்களாக மாற்றி வருகிறது.

The post ‘விடியல் பயணம் திட்டம்’ மூலம் சேமிப்பு என்பதை விட பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது: மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CM ,SPC ,Chennai ,Chief Minister ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்