×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை கிடைத்ததா? தமிழ்நாடு அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில், தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை முடித்து வைத்த உத்தரவையும், புலன் விசாரணை பிரிவு அறிக்கையையும் மூடி முத்திரையிட்ட உறையில் ஆணையம் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹென்றி திபேன் ஆஜராகி, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது, பலியானவர்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியது என்று தமிழ்நாடு அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டபோதும், அதன் அடிப்படையில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விதிகளை மீறி மனித உரிமைகள் ஆணையமும் வழக்கை முடித்து வைத்துள்ளது என்றார். அதற்கு ஆணையம் தரப்பில், புதிதாக ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் மீண்டும் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவிடபட்டுள்ளது.

ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரம் என்று வாதிடப்பட்டது. பின்னர், சீலிட்ட கவரில் இருந்த அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அறிக்கை மற்றும் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை ஆகியவை அரசுக்கு கிடைத்துள்ளதா, இல்லையா என்று விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு தரப்பிற்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கை கிடைத்ததா? தமிழ்நாடு அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Human Rights Commission's Intelligence Division ,Thoothukudi ,Government of Tamil Nadu Replacement ICORT ,Chennai ,Thoothukudi Sterlite Plant ,Tamil Nadu Government Replacement ICORT ,Dinakaran ,
× RELATED வீடு கட்டுவதற்கு ₹9 லட்சம் வாங்கி...