×

ஆந்திர சட்டப்பேரவையில் 2வது நாளாக அமளி பேரவையில் விசில் அடித்து எதிர்ப்பு தெரிவித்த நடிகர் பாலகிருஷ்ணா: 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

திருமலை: ஆந்திர சட்டப்பேரவையில் 2வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. அப்போது நடிகர் பாலகிருஷ்ணா விசில் அடித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் அமளியில் ஈடுபட்ட 3 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது சட்டசபைக்கு வந்த எம்எல்ஏக்கள், சந்திரபாபு மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்யக்கோரி பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் ஒத்தி வைத்தார். பின்னர் கூட்டம் கூடிய பிறகும் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் முழக்கத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் 15 பேரை ஒருநாள் பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தமிமினேனி சீதாராம் உத்தரவிட்டார். இந்நிலையில் 2வது நாள் பேரவை நேற்று காலை கூடியது. அப்போது சபைக்கு வந்த தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சட்டப்பேரவை தலைவர் மேசையை முற்றுகையிட்டனர். மேலும் நடிகர் பாலகிருஷ்ணா விசில் அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சபாநாயகர் தமிமினினேனி சீதாராம் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தெலுங்கு தேசம் கட்சியினரை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி எல்எல்ஏக்களான நிம்மலாநாயுடு, புச்சரி சவுத்ரி, வெலகப்புடி ராமகிருஷ்ணா ஆகிய 3 பேரை ஒருநாள் முழுவதும் சபை கூட்டத்தில் பங்கேற்கவும் தடை விதித்தார். சட்டசபை கூட்டத்தை 15 நிமிடம் சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதையடுத்து மீண்டும் சபை கூடியது. அப்போதும் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

*மீசையை முறுக்கினால் நாங்கள் பயப்படமாட்டோம் – அமைச்சர் ரோஜா
சட்டபேரவைக்கு வந்த அமைச்சர் ரோஜா பேசியதாவது: ‘தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் நீங்கள் 23 பேர் மட்டுமே. நாங்கள் 151 பேர். எங்களை சட்ட பேரவையில் மதிக்கவில்லை என்றால் உங்கள் நிலைமை என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். நாங்கள் அமைதியாக இருக்கிறோம். தெலுங்கு தேசம் கட்சியினர் ரவுடித்தனம் செய்தால் அதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். நடிகர் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கினால் நாங்கள் யாரும் பயப்பட மாட்டோம்’ என்றார்.

*சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல்
ரூ.241 கோடி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து சந்திரபாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மேலும் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். இதற்கிடையே தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

The post ஆந்திர சட்டப்பேரவையில் 2வது நாளாக அமளி பேரவையில் விசில் அடித்து எதிர்ப்பு தெரிவித்த நடிகர் பாலகிருஷ்ணா: 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Balakrishna ,Amali Assembly ,Andhra Legislative ,Assembly ,Tirumala ,Andhra ,Legislative Assembly ,Andhra Legislative Assembly ,
× RELATED 5 ஆண்டுகளில் 41 சதவீதம் அதிகரிப்பு...