×

வலுவான அரசு என்பதால் தான் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: பிரதமர் பெருமிதம்

புதுடெல்லி: பெரும்பான்மையுடன் கூடிய வலுவான,நிலையானஅரசு என்பதால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையொட்டி பாஜ மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில்,‘‘ முழு பெரும்பான்மையுடன் கூடிய வலுவான, நிலையான அரசு உள்ளது. அதனால்தான் நீண்ட நாள் நிலுவையில் இருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கை 30 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது.

இதற்கு முன் இருந்த அரசிடம் உறுதி இல்லை. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டனர். பாஜ அரசு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனால் தான் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவின் நகல்களை அவையில் கிழிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் கூட தற்போது ஆதரவு அளித்துள்ளனர். இந்த மசோதா பெண்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.

* காங்கிரஸ் குற்றச்சாட்டு
தேர்தலில் பிரச்னையாக கொண்டு வருவதற்குதான் மகளிர் இடஒதுக்கீடு தாமதப்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில்,மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை வரும் மக்களவை தேர்தலிலேயே செயல்படுத்த வேண்டும்.அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என 2 திருத்தங்களை மாநிலங்களவையில் காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால், அந்த 2 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்ற காரணங்களை சொல்வதால் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்தும் பாஜவின் உள்நோக்கம் வெளிப்பட்டுள்ளது என்றார்.

The post வலுவான அரசு என்பதால் தான் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது: பிரதமர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : PM ,Purumitham ,New Delhi ,Modi ,Perumidham ,Dinakaran ,
× RELATED “ஆம்.. இல்லை.. ஏதாவது ஒன்ன டிக் பண்ணா...