×

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நாளை தொடக்கம்: பதக்க வேட்டைக்கு இந்தியா ஆயத்தம்

ஹாங்சோவ்: 1951ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடைபெறவேண்டிய நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) போட்டி தொடர் தொடங்குகிறது. வரும் அக்டோபர் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் மொத்தம் 482 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 655 வீரர்கள் 39 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர். நாளை கண்கவர் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பசுமை அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில் வாண வேடிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தேசிய கொடியுடன் அணிவகுப்பில் நடைபோடும். இந்தியா சார்பில் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தேசிய கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர். இந்த விளையாட்டுகளில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இதனால் ஆசிய விளையாட்டு தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்த முறை தங்கம் வெல்லும் முனைப்பில் உள்ளது.

தனது முதல் போட்டியில் நாளை மறுநாள் உஸ்பெகிஸ்தானுடன் மோத உள்ளது. இதை தவிர மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கபடி, கிரிக்கெட், ஈட்டி எறிதல், ஓட்டபந்தயம், குத்துச்சண்டை உள்ளிட்ட பிரிவுகளிலும் இந்தியா பதக்கங்களை குவிக்க தயாராக உள்ளது. ஆடவருக்கான பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ரக்பி, தற்காப்பு கலை, மகளிர் பளுதூக்குதலில் பதக்கத்தை எதிர்பார்க்கலாம். ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வது உறுதி. போட்டிகள் அனைத்தையும் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஹாங்சோவில் அமைந்துள்ள ஹாங்சோ ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி நாளை மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற உள்ளது.

The post சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நாளை தொடக்கம்: பதக்க வேட்டைக்கு இந்தியா ஆயத்தம் appeared first on Dinakaran.

Tags : 19th Asian Games ,Hangzhou, China ,India ,Hangzhou ,Asian Games ,19th ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...