×

அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நேரில் களமிறங்கிய கலெக்டர்

அரியலூர், செப்.21: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவதும் நடைபெற்று வருகிறது.

ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் – 09 ஜூப்பிலி ரோடில் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளையும், உட்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்புகள், நோயாளிகளின் கவனிப்புகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் போன்ற பணிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்ப்படும் சிகிச்சை மற்றும் சிறப்பு டெங்குக்காய்ச்சல். வார்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளின் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு பருவ கால காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்றார். நகராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து, கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். ஏடிஎஸ் கொசு நல்ல நீரில் உற்பத்தியாகிறது. அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தங்கள் வீட்டைச்சுற்றி மற்றும் பிற பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அரசுத்துறை அலுவலர்கள் தலைமையில், ஒவ்வொரு வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் துறைகள் பொது சுகாதாரத் துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். அனைத்து தலைவர்களும் தங்கள் பகுதிகளில் கொசு மருந்து அடிக்க தேவையான மூலப் பொருட்களை வாங்கி தருமாறு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்நேக்க தொட்டிகளில் தினமும் கட்டாயம் குளோரினேற்றம் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் தொட்டி மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிராம மாராட்சிகள் பொது மக்கள் அறியும் வண்ணம் மழைக்காலங்களில் கொசுக்கள் மூலம் ஏற்படும் நோய்கள் குறித்து ஒளி,ஒளி வடிவம் மற்றும் நோட்டீஸ்கள் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்திடவேண்டும் பள்ளிகள், கல்லூரிகள் அரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் மழைநீர் தேங்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர், உடைந்த பொருட்கள் மற்றும் தேங்காய் ஓடுகள் போன்ற கொசுப்புழு வளரும் காரணிகளை கண்டறிந்து முற்றிலும் அகற்றி சுகாதாரமான மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் உள்ள கடைகள் மற்றும் வீதிகளில் உள்ள டயர்களை அப்புறப்படுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். ஆய்வின்போது, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அஜிதா, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மரு.உஷா, ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழ்செல்வன், மருத்துவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் நேரில் களமிறங்கிய கலெக்டர் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,District Collector ,Annie Marie ,Jayangkondam ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...