×

மாஜி அமைச்சர்களை கண்காணிக்கும் சேலம்காரரை பற்றிய தகவலை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இலைக்கும் தாமரைக்கும் முட்டல் மோதல் சவுண்ட் சர்வீஸ் மூலம் துவங்கியது எங்கே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கூட்டணி தர்மத்தை மறந்து தேசிய கட்சி, இலை கட்சியை டாமினேட் செய்ய நினைத்தது. இதில் தாமரை கட்சியின் ‘மவுன்டன்’ கட்சியினரின் பேச்சு இலையில் சலசலப்பை அல்ல, சூறாவளி போல சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த இலையின் தலைமை நேரடியாக விமர்சனம் செய்யாமல், தன் அடிமட்ட தொண்டர்கள் மூலம் ஸ்டிராங்க் மெசேஜ் கொடுத்ததாம். அதுதான் கூட்டணியில் இருந்து தாமரையை கழட்டிவிடும் பிளான் என்ற குண்டை போட்டு தாமரையின் இலைகளை சிதறடிக்க செய்த அரசியல் தந்திரமாம். இலை கட்சி கூட்டணி இல்லாமல் மக்களவை தேர்தலில் நாம் தேற முடியாது. நோட்டாவை கூட மிஞ்ச முடியாது என்பது தாமரையின் உள்ளூர், தேசிய தலைமைக்கு நன்றாகவே தெரியுமாம். இப்போதைக்கு இலையை உடைக்க நேரம் சரியாக அமையாததால் அடுத்த ஐந்தாண்டில் அந்த புராஜெக்ட் தொடங்குமாம். அதாவது திட்டம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு துவங்கலாம் என்ற பேச்சு தாமரை தரப்பில் ஓடுதாம். இதனால் கூட்டணி உடைந்து போன விரக்தியில் இருக்கும் தாமரை கட்சியின் ஒரு பகுதியினர் எலக்‌ஷன் வரை அமைதி காக்க திட்டமாம். மற்றொரு குரூப் கலகத்தை இப்போதே துவங்கிட்டாங்களாம். அதாவது, அல்வா ஊரில் அந்த கட்சியின் தமிழான அவைத் தலைவரை அழைத்து மாநாடு விளக்க பொதுக்கூட்டம் போட்டாங்க. அந்த சமயம் பார்த்து விநாயகர் சிலை வைத்திருந்த தாமரை தரப்பினர், இலை கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு போட்டியாக சத்தமாக பாட்டு போட்டு இலை கட்சியினரை திக்கு முக்காட வைச்சுட்டாங்களாம். இதனால் இரு தரப்பும் எதிரும், புதிருமாக மோதிக் கொண்டதாம். நாங்கள் முதலிலேயே சிலை வைத்து விட்டோம். பாட்டு போடத் தான் செய்வோம் என தாமரை கட்சியினர் மல்லு கட்டினாங்களாம். இந்த விஷயத்துல காக்கிகள் தலையிட்டதால இலை கட்சியினர் மவுனவிரதம் கடைபிடிப்பது போல அமைதியாக இருந்துட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி அமைச்சர்களின் அரசியல் நடவடிக்கை கண்காணிக்கப்படுதாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை மற்றும் தாமரை கட்சி இடையே தற்போது பனிப்போர் உச்சத்தை தொட்டுள்ளது. இதையடுத்து, தாமரை கட்சியையும், கட்சி மாநில தலைவரையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வறுத்தெடுக்கிறாங்களாம். இதுவரை அமைதிகாத்த இலை கட்சியினரின் சவுண்டை பார்த்து தமிழ்நாடு தலைவர் ‘மவுன்டன்’ கடும் அப்செட்டில் இருக்கிறாராம். இந்த விஷயத்தை டெல்லியில் உள்ள தாமரை தலைமைக்கு கொண்டு சென்றாராம், அங்கிருந்து இலையை பார்லி தேர்தல் வரை அட்ஜெஸ்ட் செய்துட்டு போ… நம்ம டார்கெட் வேறு கட்சி என்று இலை மேல் சொன்ன புகாரை தூசு தட்டுவது போல தட்டிவிட்டுட்டாங்களாம். ஆனால் டெல்டாவில் மலைக்கோட்டை, மன்னர், டெக்ஸ்டைல்ஸ், மனுநீதி சோழன், கடலோர மாவட்டங்களை சேர்ந்த மாஜி அமைச்சர்கள் தாமரைக்கு எதிராகவும், அந்த கட்சி மாநில தலைவர் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் விரதம் இருந்து வர்றாங்களாம். இந்த தகவல் சேலம்காரரின் கவனத்துக்கு அணியின் மற்ற தலைவர்கள் கொண்டு போனாங்களாம். தன் மீதும், இலை கட்சியின் மீதும் எந்தளவுக்கு மாஜி அமைச்சர்களுக்கு நம் மீது உள்ளதை விட பாசம் மவுன்டன் கட்சியின் தலைவர் மீது அதிகம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாராம். ஒன்றியத்தின் விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் ‘மவுன்டன்’ தலைவருக்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறார்களாம். தங்களை, சொத்துகளை காக்கவே இந்த மவுன புரட்சியை டெல்டாவில் உள்ள பெருந்தலைகள் கடைபிடிக்கிறார்களாம். அதனாலதான், தாமரைக்கு எதிராக வாய் திறக்க மறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாராம். எனினும் ஓவராக பணிந்து போவதும், அமைதி காப்பதும் தாமரையை மலரச் செய்துவிடும், மரத்தில் இருந்து இலையை உதிர செய்துவிடும் என்ற எண்ணத்துக்கு சேலம்காரர் வந்துள்ளாராம். இவர்களது நடவடிக்கைகள் குறித்து ரகசியமாக கண்காணிக்க தனி டீம் ஒன்றை சேலத்துக்காரர் நியமித்துள்ளாராம். இந்த டீம் அந்தந்த மாவட்ட மாஜி அமைச்சர்களை கண்காணித்து வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இளசுகளுக்கு இலை கட்சியின் கதவு திறந்தே வைத்திருக்க யார் உத்தரவு போட்டிருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சேலத்துக்காரர், கட்சியில் உள்ள மூத்த தலைகளை களையெடுக்க திட்டம் போட்டிருக்காராம். அவர்களுக்கு பதிலாக இளைஞர், இளம்பெண்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக 30 வயதுக்கும் கீழ் உள்ளவர்களை கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்குள்ளாகவே எல்லா வேலையையும் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்காராம். மேலும், ஒரு பூத்துக்கு 47 பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டுமாம். இதற்காக மாங்கனி மாநகரத்து நிர்வாகிகள் இரவு பகலா உறுப்பினரை சேர்க்கும் பணியில் இருக்காங்களாம். ஆனா, இலைக்கட்சியின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையாம். அதேநேரத்துல நிர்வாகிகளிடம் பெரும் புகைச்சல் ஏற்பட்டிருக்காம். இத்தனை நாள் கட்சிக்காக உழைத்தோம், ஆனால் எங்களுக்கு பொறுப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்றைக்கு கட்சியில சேரும் நபர்களுக்கு புது பொறுப்பா என்று நினைத்தவாறு உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கம் காட்டுறாங்களாம். தலைமையின் உத்தரவை மாவட்ட செயலாளர் ஒருவர் இலை கட்சியின் ரகசிய திட்டத்தை ஒருவர் மட்டுமே அமல்படுத்தியிருக்காராம். அதற்கும் வைட்டமின் ‘ப’ திட்டம் தானாம். சுமார் எழுநூறு பூத்துக்கும் தலா ரெண்டு ஆயிரத்தை தட்டி விட்டாராம். இதனால உற்சாகமடைந்துள்ள நிர்வாகிகளின் வேலை இப்போ சுறுசுறுப்படைஞ்சிருக்காம். தேர்தல் நேரத்தில்தான் பூத் காசு என்று கேள்விப்பட்டிருக்கோம். உறுப்பினரை சேர்ப்பதற்கும் ‘பூத்’ காசா என சக அரசியல் கட்சியினர் மூக்கின்மேல் விரலை வச்சிக்கிட்டிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post மாஜி அமைச்சர்களை கண்காணிக்கும் சேலம்காரரை பற்றிய தகவலை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Maji ,Salamgarar ,wiki ,Sound Serv ,Peter Uncle ,Salemgarh ,
× RELATED பாஜ பொய் பட்டியல் கொடுத்திருக்கு நான்...