×

இந்தியா நிலவை அடைந்தபோது உலக நாடுகளிடம் நிதிக்காக பாகிஸ்தான் கையேந்துகிறது: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சாடல்

இஸ்லாமாபாத்: இந்தியா நிலவை அடைந்தபோது நிதிக்காக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கையேந்துகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சித்துள்ளார். நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனை தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மீதான மதிப்பு சர்வதேச அரங்கில் உயர்ந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் திட்டத்தை தொடர்ந்து ஆதித்யா என்ற விண்வெளி திட்டத்தையும் இந்தியா செயல்படுத்த தொடங்கியுள்ளது. சூரியனின் வெளிப்புறத்தை ஆதித்யா என்ற விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. அடுத்தடுத்து இந்தியா தனது விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது அவர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருகிறார். இந்த சூழலில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக நவாஸ் ஷெரீப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியா நிலவை அடைந்து, ஜி-20 மாநாடுகளை நடத்தி கொண்டிருக்கும்போது பாகிஸ்தான் பிரதமர் ஒவ்வொரு நாடாக சென்று நிதிக்காக பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்.

இந்தியா போன்று பாகிஸ்தானால் ஏன் சாதிக்க முடியவில்லை? இந்த மோசமான நிலைமைக்கு யார் காரணம்? இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது ரூ.8,300 கோடி இந்திய அரசிடம் இருந்தது. தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்பு சுமார் ரூ.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனவே அடுத்து வரும் தேர்தலில் இவற்றையெல்லாம் சிந்தித்து பார்த்து பாகிஸ்தான் மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.ஏற்கனவே அந்நாட்டில் பல்வேறு பிரச்னைகள் நீடித்து வரும் நிலையில் நவாஸ் ஷெரிப்பின் இந்த பேச்சு அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

The post இந்தியா நிலவை அடைந்தபோது உலக நாடுகளிடம் நிதிக்காக பாகிஸ்தான் கையேந்துகிறது: முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சாடல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,India ,Former ,PM ,Nawaz Sharif Chatal ,Islamabad ,Nawaz Sharif ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...