×

195 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

மயிலாடுதுறை, செப்.21: மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 195 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன. மயிலாடுதுறையில் இந்து முன்னணி சார்பில் 25 விநாயகர் சிலைகள் கோலாகலமாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்று பூம்புகார் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பல்வேறு கோயில்களில் 195 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக 3 நாட்கள் வைக்கப்பட்டன. மயிலாடுதுறையில் மாயூரநாதர் கீழவீதியில் அம்மையப்பன் விநாயகர், மற்றும் காமதேனு விநாயகர், வீர விநாயகர், கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு கோவில்களில் வைக்கப்பட்டிருந்தன. இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைக்கப்பட்டன.

மயிலாடுதுறை சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட 25 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. அருணா பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கிய விநாயகர் ஊர்வலத்தை பாஜக மாவட்ட தலைவர் அகோரம் தொடங்கி வைத்தார். மின்னொளியால் அலங்கரிக்கபட்டு நான்கு சக்கர வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இளைஞர்களின் குத்தாட்டத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற ஊர்வலத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து தங்கள் செல்போன்களில் படம் பிடித்து உறவினர்களுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர். போலீஸ் பாதுகாப்பு பணியில் இடையூறு அளிக்கும் வகையில் செயல்பட்ட இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தியதால் சற்று பதட்டம் ஏற்பட்டது. கால்டக்ஸ் பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்து பூம்புகார் கடற்கரைக்கு எடுத்து சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

சீர்காழி: சீர்காழியில் 40க்கும் மேற்பட்ட கோயில்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடந்தது. இந்த சிலைகள் அனைத்தும் 19ம் தேதி (நேற்று முன்தினம்) இரவு ஊர்வலமாக புறப்பட்டு சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் அணிவகுத்து நின்றன. அப்போது அனைத்து விநாயகர்களுக்கும் தேங்காய் உடைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது பின்பு அனைத்து விநாயகர் சிலைகளும் ஒன்றின் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்வலமாக சென்றன. அப்போது வான வேடிக்கை ட்ரம்ஸ் வாத்தியங்கள் ஒலித்தன. விநாயகர் ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சட்டநாதபுரம் உப்பனாற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

The post 195 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Ganesha ,Vinayagar Chaturthi festival ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...