×

மேடவாக்கத்தில் பரபரப்பு ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிக்கு வெட்டு: தப்பி ஓடிய வாலிபருக்கு போலீஸ் வலை

வேளச்சேரி, செப்.21: ஒருதலை காதலால் மாணவியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மேடவாக்கத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் கனிஷ்கா (16). இவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் கனிஷ்கா, கல்லூரி செல்வதற்காக நேற்று காலை மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வந்த வாலிபர், மாணவியை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்துச் சென்று, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நின்று பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மாணவியின் கழுத்து, முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றார். இதில் மாணவியின் கை விரல் துண்டானதில் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த மாணவியை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை சார்பில், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியிடம் விசாரணை நடத்தியதில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் ஒருதலையாக மாணவியை காதலித்துள்ளார். இதனால் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவியின் கையை பிடித்து இழுத்துச்சென்று, தன் காதலை தெரிவித்தும், மாணவி ஏற்காததால் ஆத்திரம் அடைந்து கத்தியால் சரமாரியாக வெட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர். மேடவாக்கத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மேடவாக்கத்தில் பரபரப்பு ஒருதலை காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவிக்கு வெட்டு: தப்பி ஓடிய வாலிபருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Medavak ,Velachery ,Medavakkam… ,Medavakkam ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!