×

மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் பெண்களுக்கு பாஜ அரசு அநீதி இழைத்துவிட்டது: மக்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் பெண்களுக்கு பாஜ அரசு அநீதி இழைத்துவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மசோதா மீது நடந்த விவாதம் வருமாறு:
சுப்ரியா சுலே(தேசியவாத காங்கிரஸ்): மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவை எப்போது மேற்கொள்ளப்படும் என்பதும் தெரியாத நிலையில், மகளிர் மசோதா எப்போது நிறைவேற்றப்படும் என்று நாங்கள் காத்திருந்து பார்க்க வேண்டுமா? மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் பெண்களுக்கு பாஜ அரசு அநீதி இழைத்துவிட்டது.

தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக): இந்த மசோதா திவாலான வங்கியின் பின் தேதியிட்ட காசோலை போல உள்ளது. பலனை விரைவாக அறுவடை செய்ய வேண்டும் என்ற அம்பேத்கரின் வாக்கை னைவில்கொண்டு, 2024-ம் ஆண்டு தேர்தல் தொடங்குவதற்கு முன், இந்த மசோதாவை விரைவில் செயல்படுத்த வேண்டும்

ராஜிவ் ரஞ்சன் சிங் (ஜேடியு): வரும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது வெறும் வெற்று வார்த்தை. அரசியல் உள்நோக்கத்துடன் கூடியது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி அமைத்துள்ளதால் ஆளும் கட்சி இதை கொண்டு வந்துள்ளது. மக்களவை தேர்தலை பார்த்து பாஜவினர் பயந்து விட்டனர்.

மஹுவா மொய்த்ரா( திரிணாமூல் காங்கிரஸ்): இந்த மசோதாவை மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்று சொல்வதற்கு பதிலாக மகளிர் இடஒதுக்கீடு மறுசீரமைப்பு மசோதா என்றே சொல்ல வேண்டும்.நிஷிகாந்த துபே(பாஜ) :மகளிர் இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் கொண்டு வந்தது இல்லை. பாஜ கொண்டு வந்தது. இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது.

ஹர்சிம்ரத் கவுர் பாதல்(அகாலி தளம்): பாஜ ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவீதம் அதிகரித்துள்ளன. 06 எம்.பி.க்கள் மீது பாலியல் பலாத்காரம், கொலை, கடத்தல் போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்களில் 45 சதவீதம் பேர் ஆளும் பாஜவை சேர்ந்தவர்கள்.

இதற்கு முன் இந்த மசோதாவை கொண்டு வராத பாஜ அரசு பதவிக்காலம் முடியும்போது கொண்டு வருவது ஏன்? பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியை உடனே கொண்டு வந்த அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நடைமுறைப்படுத்த தாமதம் செய்கிறது. இந்த மசோதா வாயிலாக பெண்களை பாஜ தவறாக வழிநடத்துகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

15 ஆண்டுகளுக்கு மேல் இடஒதுக்கீடு நீடிக்கலாம்
மக்களவையில் நேற்று பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்,‘‘ பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மிக முக்கிய மசோதா.எம்பிக்கள் அனைவரும் இதை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றம் முடிவெடுத்தால் இடஒதுக்கீட்டின் காலத்தை 15 ஆண்டுகளுக்கு மேல் அதிகரிக்க செய்யலாம்’’ என்றார். ஒன்றிய இணையமைச்சர் அனுப்ரியா பேசுகையில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களின் உரிமைகள், நலன்களை பாதுகாக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார்.

எதிர்க்கட்சிகளுக்கு ஸ்மிருதி இரானி கண்டனம்
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதன் பிறகு தொகுதி மறுவரையறுத்தல் ஆகிய பணிகள் முடிந்த பின்னரே இந்த மசோதாவை அமல்படுத்த முடியும். அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா? அரசியலமைப்புக்கு நாம் கீழ்படிய வேண்டாமா? இந்த நிலைப்பாட்டை தான் எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளனவா? பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தடையாக இருக்க வேண்டாம்,” என்று கூறினார்.

குறைகளை பின்னர் சரிசெய்யலாம்: அமித் ஷா
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை முதலில் நிறைவேற்றலாம், அதில் இருக்கும் குறைபாடுகளை பின்னர் சரி செய்ய முடியும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவையில் அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘‘மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அடுத்த அரசானது தேர்தல் முடிந்த உடனே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய பணிகளை மேற்கொள்ளும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை நடைமுறைப்படுத்தும்.

2029ம் ஆண்டுக்கு பிறகு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை குறிக்கும். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை மற்றும் சமமான பங்களிப்பு ஆகியவை அரசின் உயிர்சக்தியாக உள்ளன. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை முன்வைப்பதற்கான ஐந்தாவது முயற்சி இதுவாகும். இந்த நாடாளுமன்றத்தால் பெண்கள் நான்கு முறை ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே இந்த முறை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். குறைகள் இருப்பின் பிற்காலத்தில் சரி செய்ய முடியும்” என்றார்.

The post மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் பெண்களுக்கு பாஜ அரசு அநீதி இழைத்துவிட்டது: மக்களவையில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : baja government ,New Delhi ,Paja ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு