×

மதுரையில் கால் இழந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் உதயநிதி..!!

மதுரை: மதுரையில் கால் இழந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். மதுரையில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்தில் ஜூடோ விளையாட்டு வீரரின் கணுக்கால் நொறுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான பரிதி விக்னேஸ்வரன் (18) பல்வேறு ஜூடோ போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். மாநில அளவில் நடைபெறும் ஜூடோ போட்டியில் கலந்து கொள்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதனிடையே, கடந்த ஜூலை 26ம் தேதி கோச்சடை பகுதியில் தனது நண்பர் வீட்டுக்கு பரிதி சென்ற போது அங்கு பழுதான மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் கிரேன் மூலம் அகற்றி மற்றொரு புதிய மின்கம்பத்தை நடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பரிதி விக்னேஸ்வரன் மீது மின்கம்பம் திடீரென விழுந்ததில் மாணவனின் இடது கணுக்கால் முறிந்தது. மருத்துவமனையில் அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கணுக்கால் வரையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து போலீசாக வேண்டும் என்ற தனது கனவு முடிவுக்கு வந்துவிட்டதாக வேதனை தெரிவித்த பரிதி, தமிழ்நாடு அரசு தனக்கு உரிய நிவாரணமும் வேலையும் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜூடோ விளையாட்டு வீரர் பரிதியை நேரில் சந்தித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க செய்தியில், மதுரையைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் தம்பி பரிதி விக்னேஸ்வரன். சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியதால், சிகிச்சையின் போது, அவரது இடது காலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இந்நிலையில், தம்பிக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம். தம்பி விக்னேஸ்வரனுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மதுரையில் கால் இழந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் உதயநிதி..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Madurai ,Udhayanidhi ,Madurai Power Board ,Dinakaran ,
× RELATED சனாதனம் தொடர்பான வழக்கில் அமைச்சர்...