×

காங்கயத்தில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம்

 

காங்கயம், செப்.20: திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியில் காங்கயம் நகர், நத்தக்காடையூர், சிவன்மலை, படியூர், சம்பந்தம்பாளையம், குங்காருபாளையம் உள்ளிட்ட 50 இடங்களில் 3 அடி முதல் 9 அடி வரையில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள், விளையாட்டு போட்டிகள், அன்னதானம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. பின்னர் அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர், வேன்கள், கார்களில் வைத்து நேற்று காங்கயம் உடையார் காலனிக்கு கொண்டு வரப்பட்டன. இந்து முன்னணி திருப்பூர் கிழக்கு மாவட்ட பொதுசெயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். ஊர்வலத்தை காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஸ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் கோஷங்களுடன் சென்ற ஊர்வலம் பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் நிறைவடைந்தது. அங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அனைத்து சிலைகளும் அங்கிருந்து திட்டுப்பாறை கீழ்ப்பவானி வாய்க்காலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காங்கேயம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில், காங்கேயம் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்ட போலீசார் செய்திருந்தனர்.

The post காங்கயத்தில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Visarjana ,Hindu ,Ganga ,Kangayam ,Tirupur District ,Kangayam Nagar ,Nattakkadaiyur ,Sivanmalai ,Badiyur ,Sambandhampalayam ,Kungarupalayam ,
× RELATED கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர்...