×

3 ஓட்டல்களுக்கு ₹13 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் அதிரடி ஆரணி நகராட்சியில்

ஆரணி, செப்.20: ஆரணியில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்திய நகராட்சி அதிகாரிகள் 3 ஓட்டல்களுக்கு ₹13 ஆயிரம் அபராதம் விதித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் காந்தி சாலை, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அசைவ மற்றும் சைவ ஓட்டல்களில் நேற்று நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ஓட்டல் சுத்தமாக உள்ளதா? தரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? காலாவதியான இறைச்சி, உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அதில், அசைவ ஓட்டலில் சமைக்க பயன்படுத்திய பழைய, கெட்டுப்போன இறைச்சி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

தொடர்ந்து, சைவ ஓட்டல்களில் சமையல் அறை, ஸ்டோர் ரூம், உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாக உள்ளதா? உணவு பொருட்கள் தரமான முறையில் வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப்போது, உணவு பார்சல் செய்ய வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் காலாவதியான மூலப்பொருட்கள், நீண்ட நாட்களாக பிரிட்ஜ்ஜில் வைத்திருந்த பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும், ஓட்டல் சமையல் அறை, வாடிக்கையாளருக்கு உணவு பரிமாறும்போது தலை, கைகளில் உறை அணியாமல் உணவு பரிமாறிய பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் இருந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் வழங்கினர். தொடர்ந்து, அசைவ, சைவ ஓட்டல்களில் சுகாதாரமற்ற, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தரமற்ற கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்திய 3 கடைகளுக்கு ₹13 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஆய்வின்போது, சுகாதார மேற்பார்வையாளர்கள் பிரதாப், குமார், அண்ணாமலை, பாபுஜி மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post 3 ஓட்டல்களுக்கு ₹13 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் அதிரடி ஆரணி நகராட்சியில் appeared first on Dinakaran.

Tags : Arani Municipality ,Arani ,Dinakaran ,
× RELATED ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு