×

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தது யார்? காங்கிரசுடன் அமித்ஷா மோதல்

புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற காங்கிரசின் கூற்றுக்கு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது, “உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக 1989ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது.

அன்று முதல் மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உறுதி செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் எடுத்து வந்தது. ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் அரசுகள் இந்த மசோதாவை நிறைவேற்ற முயன்றன. சில சமயங்களில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெற முடியவில்லை. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்னும் உயிருடன் உள்ளது. அண்மையில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி வலியுறுத்தப்பட்டது” என்று கூறினார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கருத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். அமித்ஷா தன் உரையில், “மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை. ரண்டாவதாக, 2014ல் 15வது மக்களவை கலைக்கப்பட்டதால், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிலுவையில் இல்லை. அது காலாவதியாகி விட்டது. எனவே இந்த விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியது தவறானது. அவர் சொல்வது உண்மையென்றால் அதற்கான ஆதாரங்களை அவர் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது அவர் தன் கூற்றை திரும்ப பெற வேண்டும்” என்று இவ்வாறு தெரிவித்தார்.

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தது யார்? காங்கிரசுடன் அமித்ஷா மோதல் appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Congress ,New Delhi ,Union Minister ,Dinakaran ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...