×

காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் கனடா தூதர் நாட்டைவிட்டு 5 நாட்களில் வெளியேற உத்தரவு: இந்தியா பதிலடி

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனி நாடு கேட்டு தீவிரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகம் முன்பு அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனடாவில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

இது பற்றி ஜி20 மாநாட்டுக்காக டெல்லி வந்தபோது பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து கனடா உளவு அமைப்புகள் மேலும் விசாரணை நடத்தி வருவதாக சொன்னார். இதைத் தொடர்ந்து பேசிய கனடா வெளியுறவு அமைச்சர் மெலனி ஜாலி, கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராய் நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார் என்று அறிவித்தார். மேலும், அவர் இந்திய உளவு அமைப்பான “ரா” அதிகாரியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, கனடாவின் தூதரக வெளியேற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவரை இந்தியா வெளியேற்றி உத்தரவிட்டுள்ளது. அவர் நாட்டை விட்டு வெளியேற 5 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான கனடா நாட்டு தூதர் கேமரூன் மெக்கே நேற்று வெளியுறவு அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டார். அப்போது, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கனடா பிரதமரின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. ஜி 20 உச்சிமாநாட்டின் போது, செப்டம்பர் 10ம் தேதி பிரதமர் மோடி மற்றும் ட்ரூடோ இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது நிஜார் கொலையில் இந்திய அரசின் உளவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

எனவே, தற்போது நடைபெறும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இந்திய அரசின் எந்தவொரு தலையீட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என ட்ரூடோ கூறினார். இதற்கு பிரதமர் மோடி முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தார்,” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், “கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட இந்திய அரசுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு கனடா இடம் அளித்து வருகிறது. கனடா தூதரக அதிகாரிகள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் இணையதள பதிவில், “நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு தீவிரவாதம் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால், அதற்கு எதிரான போரில் சமரசத்துக்கு இடமில்லை என்பதை காங்கிரஸ் எப்போதும் நம்புகிறது. நாட்டின் நலன் மற்றும் அக்கறைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்,” என்று கூறியுள்ளார். இந்தியா- கனடா இடையே நடந்த வர்த்தக பேச்சுவார்த்தை அண்மையில் தடைப்பட்டது. இப்போது, இந்தியா மீது கனடா பிரதமர் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

* இந்தியாவை தூண்டிவிட கனடா விரும்பவில்லை: ஜஸ்டின் ட்ரூடோ விளக்கம்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம் குறித்தும், சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை குறித்தும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில்,’ இந்திய அரசு இந்த விஷயத்தை மிகுந்த தீவிரத்துடன் அணுக வேண்டும். நாங்கள் அதைச் செய்கிறோம். அதற்காக இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது குற்றம் சாட்டவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். இந்திய அரசின் முகவர்களுக்கும், கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும் இடையிலான சாத்தியமான தொடர்பு பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

The post காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல் கனடா தூதர் நாட்டைவிட்டு 5 நாட்களில் வெளியேற உத்தரவு: இந்தியா பதிலடி appeared first on Dinakaran.

Tags : Khalistan ,ambassador ,India ,New Delhi ,Sikhs ,Canada ,Dinakaran ,
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...