×

அவிநாசியில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் சாலை பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையோரம் உள்ள நெடுஞ்சாலை மழை நீர் வடிகால் பாதையில் அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்து கிடப்பதாக அவிநாசி போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அவிநாசி போலீஸார், பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அப்பெண் அவிநாசி மங்கலம் சாலை பகுதியில் சுற்றிவந்த மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண் என்பது தெரிய வந்தது. மேலும், அருகில் சர்வீஸ் சாலையில் மறுபுறம் இருந்த, பூலக்காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் கடை வாசலில் இருந்து பிரேதம் கிடந்த இடம் வரை இழுத்துச் சென்ற இரத்தக் கறை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்த அந்த எலக்ட்ரிகல் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் உடனடியாக ஆய்வு செய்தனர்.

அதில் நேற்று முன்தினம் இரவு பூட்டியிருந்த எலக்ட்ரிக்கல் கடை வாசலில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, நள்ளிரவு நேரத்தில் பதுங்கிய படி தலையில் துணியை சுற்றிய வாரு வந்த ஒருவன் அருகிலிருந்த கல்லை தூக்கி வந்து அப்பெண்ணின் தலையில் போட்டு கொடூரமாக கொன்று, உடனடியாக பெண்ணின் காலை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு சாலையை கடந்து மறுபுறம் புதர் மறைவில் இருந்த நெடுஞ்சாலை மழைநீர் வடிகால் பாதைக்கு செல்வதும், பிறகு சுமார் அரை மணி நேரத்திற்கு பின் மீண்டும் எலக்ட்ரிக்கல் கடை முன் வந்து வேவு பார்த்துவிட்டு அங்கு அந்தப் பெண் வைத்திருந்த குடிநீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்த வழியே செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தடையவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொலையாளி யார் என்பது குறித்தும், கொலை செய்த பின்பு கற்பழித்தானா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் புஸ்பபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால்ராஜ்சிங் மகன் ஹில்டன் என்பவன் மனநலம் பாதித்த ஆதரவற்ற பெண்னை கொலை செய்தது தெரியவந்தது. கடந்த இரு மாதங்களாக அவிநாசி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஹில்டன், ஆம்புலன்ஸை அதிவேகமாகவும், குடி போதையிலும் ஓட்டுவதாக புகார் வந்ததை அடுத்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் நேற்று முன்தினம் ஹில்டனை பணியிலிருந்து நீக்கியுள்ளார்.

இதையடுத்து அன்று இரவே மனநலம் பாதித்த பெண்னை தலையில் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்து கற்பழித்துவிட்டு அவிநாசி-கோவை பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது, அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தான். அப்பகுதி மக்கள் அவனை மீட்டு, அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவிநாசி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட பெண் எந்த ஊரைச் சேர்ந்தவர், மன நலம் பாதிக்கப்பட்டவரா, ஆதரவற்றவரா என்பதும் குறித்தும், கொலைக்கான காரணம் மற்றும் கற்பழிக்கப்பட்டாரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் பாதுகாப்புடன், விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் உள்ள கொலையாளி ஹில்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post அவிநாசியில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Tiruppur ,Serviz Road ,Avinasi Mangalam Road Bypass ,Tiruppur District ,Dinakaran ,
× RELATED அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில்...