×

திறமைக்கு ஏது தோல்வி!

மாவீரன் அலெக்சாண்டரின் தந்தை பிலிப்.அவர் ஒரு உயர்ந்த வகை குதிரையை வாங்கினார். மக்கள் மத்தியில் சவாரி செய்து தன் திறமையை வெளிப் படுத்த ஆசைகொண்டார். ஆனால் குதிரை அவரைத் தள்ளிவிட்டது. பலமுறை முயன்றும் குதிரையை அவரால் அடக்க முடியவில்லை.இதை கவனித்துக்கொண்டிருந்த அவரது 10 வயது மகன் அலெக்சாண்டர், நான் சவாரி செய்து காட்டலாமா? என்று தந்தையிடம் அவரது அனுமதியைக் கேட்டான்.தன்னால் முடியாததை இவன் எப்படி,எங்கே சாதிக்கப் போகிறான் என்ற சந்தேகம் அவருக்கு, ஆனால் கேட்பதோ மகன், அதுவும் மக்கள் மத்தியில், மறுக்க முடியுமா?அரைமனதுடன் மன்னர்
அனுமதி தந்தார்.

அலெக்சாண்டர் குதிரையின் அருகில் வந்து அதை நன்றாகக் கவனித்தார். அது பயணித்த திசையை நோக்கினார்.அது மேற்குத் திசை. கிழக்கிலிருந்து வந்த சூரிக்ய கதிர்கள் குதிரையின் நிழலைப் பெரிதாக்கித் தரையில் விழச்செய்தது. அதைக் கண்ட குதிரை மிரண்டு, தன்மீது ஏறி சவாரி செய்பவர்களை தள்ளிவிடுகிறது என்பதைப் புரிந்துகொண்டார்.பயணத் திசையை மேற்கிலிருந்து கிழக்காக மாற்றினார். வெளிச்சத்தில் குதிரை பயமின்றி ஓடியது அலெக்ஸாண்டர் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்குப் பின்னணியாக இருந்தது, அவரது ஆராய்ந்து அறியும் நுணுக்கமான திறமை. அது தனித்திறமை,
எல்லாவற்றிற்கும் மேலாகத் திறமைகளை எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதே.

அப்படி தன் திறமைகள் மூலமாக இளம் வயதிலேயே சாதித்த சாதனைப் பெண்மணிதான் ஜான்ஹவி.ஜான்ஹவி பன்வார் வயது மாணவிகள் 8ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அதிபுத்திசாலி மாணவியான ஜான்ஹவி டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இது மட்டுமின்றி ஜான்ஹவி எட்டு வெளிநாட்டு மொழிகளை நல்ல உச்சரிப்புடன் பேசுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் பிரெஞ்சு, ஜப்பானிய மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை அடங்கும்.

எனது மகள் கடவுள் கொடுத்த பரிசு.அவளுக்கு ஒரு வயது இருக்கும்போது 500-550 ஆங்கிலச் சொற்கள் உச்சரிக்கத் திறமை பெற்றிருந்தாள். நாங்கள் ஜான்ஹவியை 3 வயதில் எல்லா குழந்தைகளையும் போல நர்சரியில் அனுமதிக்கச் சென்றபோது,பள்ளி நிர்வாகம் அவள் திறமையைப் பார்த்து வியந்து அவளை நேரடியாக சீனியர் கே.ஜி.யில் சேர்க்க அனுமதித்தனர், என்று நெகிழ்ந்து பேசுகிறார் ஜான்வியின் தந்தை.

ஜான்ஹவி தாய் இல்லத்தரசி,தந்தை பிரிஜ்மோகன் பள்ளி ஆசிரியர்.தங்களிடம் வசதி குறைவாக இருந்தாலும், ஜான்ஹவி திறமையை மேலும் வளர்க்க தங்களால் முடிந்த உதவிகளை அவர்கள் செய்தார்கள், அது மட்டுமல்ல தனது மகளை எப்போதுமே ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள். இதன்பின்னர் ஜான்ஹவியின் திறமையை பார்த்த பள்ளி நிர்வாகம் ஆலோசித்து ஒரே வருடத்தில் இரண்டு வகுப்பு படிக்க வைத்து தேர்ச்சி பெற சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்தார்கள்.அதன் பிறகு பள்ளிபடிப்பை முடித்து விட்டு 13 வயதில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பித்தார்,அவரது அறிவுத் திறமையை பார்த்து வியந்து போன டெல்லி பல்கலைக்கழகம் இளம் வயதில் கல்லூரிப் படிப்பை படிக்க அனுமதி அளித்தது.

ஜான்ஹவி பெற்றோர்கள் பாரம்பரியமாக கிராமப்புற பின்னணியைச் சேர்ந்தவர்கள், அவருடைய பெற்றோர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. மேலும் ஜான்ஹவி படிக்கும் பள்ளியில் கூட, ஜான்ஹவி அளவிற்கு ஆங்கிலத்தில் பேசும் ஆசிரியர்கள் இல்லை.உள்ளூர் மொழி இந்தி பேசும் ஆசிரியர்கள் மட்டுமே இருந்தார்கள். அதனால் அவரது தந்தை ஜான்ஹவியை அழைத்துக் கொண்டு டெல்லிசெங்கோட்டைக்குச் செல்வார். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுடன் பேச வைத்து, சரளமாக ஆங்கிலம் உட்பட மற்றமொழிகளையும் கற்றுக்கொள்ள உதவி செய்தார்.மேலும் ஆங்கிலச் செய்தி வீடியோக்களை பதிவிறக்கம் செய்து ஜான்ஹவியிடம் கொடுத்து அதைக் கேட்கச் செய்வார். ஜான்ஹவி ஒரு மணி நேரச் செய்தியை முழுமையாகக் கேட்டு, செய்தி வாசிப்பாளர் உச்சரிப்பதைபோலவே உச்சரித்துப் பேசுவார். அதன் பிறகு ஜான்ஹவிக்கு தொடர்ந்து, பயிற்சி அளிக்க அவரை ரேகா ராஜ் என்ற பயிற்சியாளரிடம் சேர்த்தார்.

ரேகா ராஜ் அவரை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஆன்லைனில் மொழியியல் வகுப்புகளில் சேர்த்துவிட்டார். இதற்குபின் ஜான்ஹவி தனது 11 வயதில் 8 மொழிகளை உச்சரிப்புடன் கற்றுக்கொண்டார்.அதன் பயனால் 14 வயதில் ஊக்கமளிக்கும் இளம்பேச்சாளராக ஜான்ஹவி மாறி உள்ளார்.மேலும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஊக்கப்படுத்தியும் வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பார்க்கும்போது தானும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கைத் தீர்மானித்து அதற்காக இப்போதிருந்தே படிக்க ஆரம்பித்துவிட்டார்.

எங்கள் கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக இருக்க வேண்டும் என்று எங்கள் கிராமத்து மக்கள் நினைப்பார்கள். பெண் குழந்தைகளை விரும்புவதில்லை. ஜான்ஹவி பிறந்தபோதும் அப்படித்தான் நடந்தது, ஆனால் என் மகள் என் பெருமை,ஜான்ஹவி எந்த வகையிலும் குறைந்தவள் இல்லை.ஜான்ஹவி மட்டுமல்ல எல்லா பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் என்கிறார் சாதனைப் பெண் ஜான்ஹவியின் தந்தை, பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தை வழங்குவது இல்லை, அவர்களுக்குத் தகுந்த நேரத்தை வழங்குவது மிகவும் முக்கியம்.அவர்கள் கல்விரீதியாக நன்றாகப் படிக்கிறார்களா, இல்லையா என்பது மட்டும் பார்ப்பது முக்கியமல்ல, அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தங்கள் குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அதை மேம்படுத்த முயல வேண்டும்.மேலும் அவர்களின் கனவுகளை அடைவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே ஜான்ஹவியின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

பெண்ணாய்ப் பிறந்தால் ஆயிரம் பிரச்சனைகள், ஆயிரம் அவமானங்கள், இவற்றையெல்லாம் தாண்டி பெண் என்பவள் துணிச்சலுடன் சாதிக்க வேண்டும். பெண் என்பவள் சாதிக்கப் பிறந்தவள் என்பதே ஜான்ஹவி வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.வாழ்க்கையில் தோல்விகள் நம்மை வளைக்கப்பார்க்கலாம். அத்தகைய சூழ்நிலையில் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.திறமைக்கேற்ற திருப்புமுனை திறக்காவிட்டாலும், மீண்டும், மீண்டும் அவதாரம் எடு, அப்போது உன் திறமை மெருகேறும். அத்தகைய திறமை எப்போதும் தோற்பதில்லை. திறமைக்கு ஏது தோல்வி.

The post திறமைக்கு ஏது தோல்வி! appeared first on Dinakaran.

Tags : Philip ,Alexander ,Dinakaran ,
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது