×

ஓஹோ என வைரல் ஆகும் ‘ஒன் எம் டூடுல்’!

‘முகமோ முகவரியோ அடையாளமோ எதுவும் வேண்டாம் நான் வரைகின்ற என்னுடைய ஓவியங்களும் டூடுல்களும்தான் என்னுடைய அடையாளம்’ இப்படி புகைப்படமே வேண்டாம் நான் யார் என்பதை என் ஓவியங்களும் டூடல்களுமே அறிமுகப்படுத்தட்டும் என ஆரம்பிக்கிறார், இன்ஸ்டாகிராமில் வைரல் டூடுல் அனிமேஷன் வீடியோக்களை பகிர்ந்து டிரெண்டாகும் ஜரீனா. ‘பேபிமா என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? விசிறிக்கிட்டு இருக்கேன்.. ஐயோ எனக்கு குளிருது!’‘என்ன பொழப்பு இது, ஒருவேளை சோத்துக்காக உசுர கொசுறா கேட்கறாய்ங்களேயா!’‘இப்ப என்ன ஆச்சு? இப்ப ஒன்னும் ஆகலை அப்படின்னு நாம பாட்டுக்கு பேசாம இருந்துட்டா அப்புறம் ஏதாவது ஆய் போச்சுன்னா என்ன செய்யறது?’இப்படி தமிழ் சினிமாவில் வரும் சில காமெடி வசனங்களை நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களுடன் இணைத்து கார்ட்டூன்களாக உருவாக்கி டூடுல் ஆர்ட்டில் கலக்கிக்கொண்டிருக்கிறார் ஜரீனா. இவரது அத்தனை காமெடி டூடுல்களும் இணையத்தில் வைரல் ஹிட்.

‘சொந்த ஊர் சென்னை, படிச்சது பிஎஸ்சி மற்றும் எம்பிஏ. சின்ன வயதிலிருந்தே ஓவியங்கள் வரைய ரொம்பப் பிடிக்கும். என் அப்பா அம்மாவுக்கு இந்த சோசியல் மீடியா பயன்படுத்துவதெல்லாம் சுத்தமா பிடிக்காது. எங்கே ஏதாவது ஆபத்து வந்துடுமோ அப்படின்னு ஒரு பயம். அதேசமயம் எனக்கு இந்த டிஜிட்டல் ஆர்ட் எப்படியாவது கத்துக்கணும்ன்னு ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் அப்பாவைப் பொருத்தவரை படிப்புதான் முதல் கடமை. எதாவது படிக்கலாமே அப்படின்னு விரட்டிட்டே இருப்பார். ஆனாலும் கல்சீர் அப்படின்னு ஒரு ஆங்கில டிஜிட்டல் ஆர்டிஸ்ட் அவருடைய ரீல்ஸ் மற்றும் யூடியூப் சேனல் எல்லாவற்றையுமே விடாம பார்ப்பேன். மறைமுகமா எனக்கு டிஜிட்டல் ஆர்ட் டீச்சர் கூட அவர்தான். அவருடைய ஓவியங்கள் டெக்னிக்ஸ் எல்லாம் தொடர்ந்து கவனிச்சிட்டே இருப்பேன். ஆனா என்கிட்ட டேப், டிஜிட்டல் ஆர்ட் பேட், வசதி எல்லாம் இல்லை. இருக்கும் மொபைல் மற்றும் லேப்டாப்பைக் கொண்டே என்னால் முடிந்த அளவுக்கு கான்செப்ட் டூடுல் அனிமேஷன்களை உருவாக்கினேன். ஆரம்பத்தில் மொக்கையாகத் தான் வந்தது. ஆனால் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ள, எடுத்துக் கொள்ள நான் வரையும் ஓவியங்களிலும் அனிமேஷன்களிலும் நிறைய முன்னேற்றம் பார்க்க முடிந்தது’ என்னும் ஜரீனா தொடர்ந்து காமெடி கான்செப்ட்களை உருவாக்கத் தொடங்கி இருக்கிறார்.

மூன்று வருடங்களுக்கு முன்னாடிதான் இந்த ‘ஒன் எம் டூடுல்(1m doodle)’ இன்ஸ்டாகிராம் கணக்கை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் அப்லோடு செய்த வீடியோக்களுக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கலை, பார்வையாளர்களும், லைக்குகளும் கூட எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் முதல் முறையாக கமல்ஹாசன் சாரையும், ஜி.பி. முத்துவையும் ஒரு கான்செப்டில் கொண்டு வந்து கார்ட்டூனாக வீடியோ வெளியிட்டேன். பலரும் அதற்கு லைக் இட்டார்கள். அங்கு தான் என்னுடைய டூடுல் இன்ஸ்டாகிராம் பக்கம் பிக்கப் ஆகத் தொடங்கியது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் சில காமெடி வசனங்களை இப்போது இருக்கும் நம் இயல்பான வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புபடுத்தி கார்ட்டூன்களாக ரிலீஸ் செய்தேன். அதிலும் 90ஸ் கிட்ஸ் பரிதாபங்கள், 90ஸ் கிட்ஸ் எமோஷனல் விஷயங்கள் என இவைகளை எல்லாம் டூடுல் அனிமேஷன் வீடியோக்களாக அப்லோட் செய்யும் பொழுது அதற்கு இன்னும் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கோடைகால பிரச்னை, கொசுவின் பிரச்னை, நீண்ட காலம் ஆகியும் திருமணம் ஆகாத பிரச்னை, முடி கொட்டும் பிரச்னை, இப்படி பல வகையான காமெடி கான்செப்டுகளை உருவாக்கத் துவங்கினேன். அத்தனையும் மூன்று வருடங்களுக்கு முன்பு தான் துவங்கியது. ஆனால் என் அப்பாவிற்கு இந்த விஷயம் எதுவுமே தெரியாது’ என்னும் ஜரினாவிற்கு முதல் டேப்லெட் கிடைத்த பிறகு அவரின் வேலையில் இன்னும் முன்னேற்றங்கள் வரத் துவங்கி உள்ளன.

என் கணவர் எனக்கு அதிக ஆதரவு கொடுக்கத் துவங்கினார். என்னுடைய ஓவியங்கள் மற்றும் டூடுல்களை ரசிக்கத் துவங்கியவர் எனக்கு ஒரு டேப்லெட் இருந்தால் இன்னும் நன்றாகவே வரைவேன் என்பதை புரிந்துகொண்டு என்னுடைய சேமிப்பு பணத்துடன் அவருடைய பணத்தையும் சேர்த்து எனக்கு ஒரு டேப்லெட் வாங்கிக் கொடுத்தார். என் கணவரே எனக்கு பெரும் சப்போட்டாக இருப்பதைப் பார்த்து என் அம்மா இப்போது மிகப்பெரிய ஆதரவாளராக மாறி இருக்காங்க. சொன்னால் நம்ப மாட்டீங்க ஒரு வாரத்திற்கு முன்புதான் என் அப்பாவிற்கு நான் டூடுல் வரைந்து இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பதிவிட்டு வருகிறேன் என்பதும் அவை அனைத்தும் டிரெண்டிங்கிலும், வைரலிலும் இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. ‘இந்த ரீல்ஸ்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேனே, கடைசியில் இந்த டூடுல்கள் எல்லாம் உன்னுடையதுதானா? என ஆச்சரியமாக அப்பா கேட்டார். எங்கே திட்டி விடுவாரோ என்று நினைத்தேன். ஆனால் சந்தோஷமாக தொடர்ந்து செய் என சொன்னவர் இப்போது அவருக்கும் சமூக வலைத்தளம் குறித்த பயமும், ஆதங்கமும் குறைஞ்சிருக்கு.

சமூக வலைத்தளம் மற்றும் இணைய தளம் பொறுத்தவரை இடைவேளை இல்லாமல் சரியான கால நேரத்தில் நம்முடைய படைப்பை கொடுத்துகிட்டே இருக்கணும். ஒரு வாரம் பிரேக் எடுத்தால் கூட நமக்கான பாளோயர்களும் வரவேற்பும் சட்டென குறைஞ்சிடும். மேலும் சமூக வலைத்தளங்கள் பொறுத்தவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம் என்கிறதாலேயே நம்முடைய வேலையை அப்படியே காப்பி பேஸ்ட் செய்யும் மக்களும் இருப்பாங்க. அவர்களுக்கிடையிலே நாம ஒரிஜினல் புராடெக்டுகளை கொடுக்கத் துவங்கினால் நிச்சயம் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும். எந்த வேலையானாலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் அதுதான் ரொம்ப முக்கியம். டெடிகேஷனும், கடின உழைப்பும்தான் அத்தனைக்கும் மூலதனம்’ சொல்கிறார் இந்த டிஜிட்டர் ஓவியர் ஜரீனா!
– ஷாலினி நியூட்டன்

The post ஓஹோ என வைரல் ஆகும் ‘ஒன் எம் டூடுல்’! appeared first on Dinakaran.

Tags : Oho ,
× RELATED அதிமுகவில் புதிய உறுப்பினர்கள்...