குமரி மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டமாக விளங்குகிறது. இங்குள்ள தோவாளை பகுதியில் மலரியல் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. தோவாளை பகுதியில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட் தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சேலம், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளா வழியாக வெளிநாடுகளுக்கும் மலர்கள் ஏற்றுமதி ஆகின்றன. மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் இங்கு பூக்களை வாங்கிச் செல்ல படையெடுக்கிறார்கள்.
இதனால் தோவாளை பூ மார்க்கெட்டை மையப்படுத்தி குமரி மாவட்டத்தில் ஆதலவிளை, கண்ணன்புதூர், ராஜாவூர், குலசேகரம்புதூர், தோவாளை, சோழபுரம் உள்பட பல்வேறு இடங்களில் அதிகளவில் மலர்கள் சாகுபடி நடந்து வருகிறது. இப்பகுதிகளில் மல்லிகை, பிச்சி, முல்லை, சம்பங்கி, செவ்வந்தி என பல்வேறு மலர்கள் தினமும் மலர்ந்து மணம் வீசுகின்றன. சோழபுரம் பகுதியில் 40 சென்ட் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்துள்ள அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்த கதிரேசன், 1 ஏக்கர் நிலத்தில் சம்பங்கி சாகுபடி செய்துள்ள புளியன்விளையைச் சேர்ந்த பகவத்சுந்தர்சிங் ஆகியோரை சந்தித்து சம்பங்கி சாகுபடி குறித்து கேட்டோம்.“ காலநிலை ஒத்துவரும்போது பூ சாகுபடி நல்ல வருமானம் தரக்கூடிய விவசாயம்தான். கடந்த 25 வருடமாக பூ சாகுபடி செய்து வருகிறோம். சம்பங்கியை நடவு செய்த 3 மாதத்தில் இருந்து 3 வருடம் வரை தினமும் அறுவடை செய்யலாம். சம்பங்கி மலர் பயிர் சுண்ணாம்பு கலந்த மண், களிமண் ஆகியவற்றில் செழிப்பாக வரும்.
சாணம் உரமாக போட்டு மண்ணை நன்கு பண்படுத்தவேண்டும். சம்பங்கியை நடவு செய்ய 5, 6 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். உழவு செய்த பின் 3 அடி அகலம் கொண்ட பாத்திகளை ஒன்றரை அடி இடைவெளியில் அமைப்போம். அந்த பாத்தியில் 1 அடி இடைவெளியில் விதைக்கிழங்குகளை நடவு செய்வோம். நாங்கள் தொடர்ந்து சம்பங்கியை சாகுபடி செய்வதால், அதில் இருந்து நல்ல தரமான விதைக்கிழங்குகளை எடுத்து வைத்துக்கொள்வோம். அதை விதை நேர்த்தி செய்து நடவு செய்வோம். நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி, அந்த ஈரத்தில் கையாலேயே விதைக்கிழங்குகளை ஊன்றிவிடுவோம். ஏக்கருக்கு 20 மூட்டை விதைக்கிழங்குகள் தேவைப்படும். நடவு செய்த 4வது நாளில் முதல் பாசனத்தை மேற்கொள்வோம்.
அதன்பிறகு 10 நாட்களுக்கு தேவைக்கேற்ப பாசனம் செய்வோம். சம்பங்கிக்கு தினமும் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. மண் ஈரம் மாறியவுடன் தண்ணீர் பாய்ச்சவேண்டும். தண்ணீர் தேங்கி நிற்க்ககூடாது. நின்றால் சம்பங்கி செடி அழுகிவிடும். இதனை நாம் கவனமாக கையாளவேண்டும். நடவு செய்த 12வது நாளில் களையெடுப்போம். அதன்பிறகு 10 நாட்களுக்கு ஒருமுறை களையெடுப்போம். செடிகள் வளர்ந்த பிறகு மாதம் ஒருமுறை களையெடுத்தால் போதும். சம்பங்கி செடிகளுக்கு இடையே களைகள் இருக்கக்கூடாது. களைகள் இருந்தால், சம்பங்கி செடி நல்லமுறையில் வளராது. மாதம் தோறும் யூரியா, டிஏபி, பாக்டம்பாஸ் உரம் போடவேண்டும். வேளாண்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பூச்சி மருந்துகளை தெளிப்போம். இவ்வாறு செய்து வர சம்பங்கி செடிகள் நன்றாக தளதளவென்று செழித்து வளரும். நடவு செய்த 3 மாதத்தில் இருந்து பூக்கள் பூக்க தொடங்கி விடும். பூக்கள் பூத்து விரியும் தருவாயில் தினமும் அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் குறைவாகத்தான் பூக்கள் கிடைக்கும். 6 மாதத்தில் இருந்து அதிகளவில் பூக்கள் கிடைக்கும்.
சம்பங்கிச் செடிகளை நன்றாக பராமரித்தால் 30ல் இருந்து 50 கிலோ வரை தினமும் பூக்களை அறுவடை செய்யலாம். சராசரியாக தினமும் 20 கிலோ பூக்கள் மகசூலாக கிடைக்கும். ஒரு கிலோ பூ 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை விலை போகும். முகூர்த்த நாட்கள், கோயில் விசேஷ நாட்கள், பொங்கல், ஓணம் போன்ற பண்டிகை நாட்களில் 100 ரூபாயைத்தாண்டி விலை கிடைக்கும். சராசரியாக 20 ரூபாய் விலை கிடைக்கும். 20 கிலோ பூக்கள் மூலம் தினமும் ரூ.400 வருமானமாக கிடைக்கும். மாதத்திற்கு ரூ.12 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். வருசத்துக்கு என்று பார்த்தால் ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். இதில் வேலை ஆட்கள் கூலி, உரம், களை அகற்றும் கூலி, தண்ணீர் பாய்ச்சுவது என மொத்தம் ஒரு ஏக்கருக்கு ₹70 ஆயிரம் செலவு ஆகும். இதுபோக வருசத்துக்கு ரூ.74 ஆயிரம் லாபமாக கிடைக்கும்.
குமரி மாவட்டத்தில் ஓணம், சரஸ்வதி பூஜை உள்ளிட்ட முக்கிய பண்டிகையின்போது பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும். சம்பங்கி பூக்களை சாகுபடி செய்யும்போது காலநிலை கைகொடுக்கும் பட்சத்தில் வருடத்திற்கு ரூ.2 லட்சம் வரை கூட லாபம் பார்க்கலாம். சம்பங்கியைப் பொருத்தவரை 3 வருசங்கள் நிச்சயம் பூக்கள் கிடைக்கும். நல்ல நிலமாக இருந்தால் 7 வருசம் வரை பூக்கள் கிடைக்கும். எல்லாம் நம் உழைப்பைப் பொறுத்துதான் ‘’ என கூறி முடித்தனர்.
தொடர்புக்கு
கதிரேசன்: 94869 61248.
பகவத்சுந்தர்சிங்
94895 85275.
பூக்களுக்கு வரவேற்பு
தோவாளை மார்க்கெட்டு தற்போது வெளியூர்களில் இருந்து அதிகளவில் பூக்கள் வருகின்றன. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் பூக்கள் ஒருநாள் கடந்து வருவதால், பூக்கள் சற்று வாடிய நிலையில் இருக்கும். ஆனால் குமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பூக்கள் ப்ரெஷ்ஷாக இருக்கும். இதனால் குமரி மாவட்ட பூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
குத்தகை முறை
விவசாயி கதிரேசன் 5 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து 40 சென்ட் நிலத்தில் மட்டும் சம்பங்கியைப் பயிர் செய்து வருகிறார். மற்ற இடங்களில் நெல் பயிரிடுகிறார். 40 சென்ட் நிலத்தில் சம்பங்கியைப் பயிர் செய்வதன் மூலம் தினசரி செலவுக்கு பணம் கிடைக்கிறது என்கிறார்.
சென்ட் தொழிற்சாலை
சீசன் சமயங்களில் பூக்களின் விலை உயர்வாக இருக்கும். அந்த நேரத்தில் விவசாயிகளுக்கு வருமானம் அதிக அளவு கிடைக்கிறது. பூக்கள் விலை இல்லாதபோது வியாபாரிகள் கூறும் விலைக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. மேலும் பூக்களை சென்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கினாலும், அவர்கள் குறைந்த அளவு பூக்களை வாங்குவது இல்லை. அப்படி வாங்கினாலும் குறைந்த விலையே கொடுக்கின்றனர். அல்லது டன் கணக்கில் பூக்களைக் கேட்கின்றனர். இதனால் நாங்கள் வியாபாரிகளுக்கு மட்டுமே பூக்கள் கொடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. தோவாளை பூ மார்க்கெட்டை மையப்படுத்தி சென்ட் தொழிற்சாலை அமைக்கும்போது பூக்களின் தேவை அதிகரிக்கும். இதனால் விவசாயிகளுக்கு நிரந்தரமான வருவாய் கிடைக்கும். வருவாய் கிடைக்கும் பட்சத்தில் மலர் சாகுபடி குமரி மாவட்டத்தில் மேலும் பெருகும் என்கிறார் விவசாயி பகவதிசுந்தர்சிங்.
The post தினசரி வருவாய் தரும் சம்பங்கி! appeared first on Dinakaran.