×

ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: 43 பேர் ‘அட்மிட்’; 3 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், சந்தைப்பேட்டைபுதூர் பழனிசாமி தெருவைச் சேர்ந்தவர் சுஜாதா. இவரது மகள் கலையரசி(14), மகன் பூபதி(12). இருவரும் கோட்டை உயர்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 7ம் வகுப்பு படித்துள்ளனர். கடந்த 16ம் தேதி இரவு, சுஜாதாவின் சகோதரர் சினோஜ், நாமக்கல்-பரமத்தி ரோட்டில் உள்ள ஐவின்ஸ் ரெஸ்டாரெண்டில் ரொட்டி, ஷவர்மா, கிரில் சிக்கன், சிக்கன்ரைஸ் ஆகியவற்றை பார்சல் வாங்கி வந்தார். அதனை வீட்டில் வைத்து, உறவினர் கவிதா உள்பட 5 பேர் சாப்பிட்டனர். மறுநாள் (17ம் தேதி) காலையில், சிறுமி கலையரசிக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதை கண்ட சுஜாதா, உடனடியாக மகளை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து, இரவில் வீட்டுக்கு வந்து விட்டனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சிறுமி கலையரசி திடீரென உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த சிறுமியுடன் சேர்ந்து ஷவர்மா சாப்பிட்ட பூபதி, சுஜாதா, சினோஜ், கவிதா ஆகிய 4 பேரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது பற்றி தகவல் அறிந்த, குறிப்பிட்ட அந்த ஓட்டலில் சாப்பிட்ட 43 பேர், நேற்று காலையில் இருந்து, நகரில் உள்ள வெவ்வேறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவனைகளில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, எம்எல்ஏ ராமலிங்கம், எஸ்பி ராஜேஸ்கண்ணன், நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி ஆகியோர், மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். சிறுமி உயிரிழப்பு காரணமான ஓட்டலின் உரிமையாளர் சிங்கிலிப்பட்டியைச் சேர்ந்த நவீன்குமார்(27), சமையல் மாஸ்டரான ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் மககுத்(27), தபாஸ்குமார்(30) ஆகிய 3 பேரையும், நாமக்கல் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், கெட்டுப்போன இறைச்சி என தெரிந்தும், அவர்கள் சமைத்து கொடுத்து, கொலை குற்றத்துக்கு இணையான செயலை செய்துள்ளதாகவும் மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

The post ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு: 43 பேர் ‘அட்மிட்’; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Shawarma ,NAMACKAL ,Namakkal ,DISTCT ,KANDUKPATTYPUR ,PALANISAMY STRET ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...