×

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயிலில் கடந்த 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருநாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியான நேற்று காலையில் கோயிலிலிருந்து திருத்தேருக்கு கற்பகவிநாயகர் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்தும், அருகம்புல் மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவருக்கு வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் இழுத்தனர். இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருள திருவீதி உலா நடந்தது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chaturthi festival ,Pilliyarpatti ,Tiruputhur ,Chariot procession ,Chaturthi festival ,Pilliyarpatti Karpakavinayakar temple ,Sivagangai district ,Chariot ,
× RELATED திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு