×

காவல்துறைக்கு மதிப்பளித்து நன்றி தெரிவிக்கும் காவல் ஆய்வாளர் விநாயகர் : ஒசூரில் காவல் நிலையம் போல பிரமாண்ட செட் அமைத்து விநாயகர் வழிபாடு

ஓசூர்: ஓசூர் ஸ்ரீநகர் பகுதி நண்பர்கள் குழு சார்பில், 24 மணி நேரமும் உழைக்கும் போலீசாருக்கு மதிப்பளித்து நன்றி தெரிவிக்கும் வகையில் காவல் நிலையம் போல பிரம்மாண்ட செட் அமைத்து விநாயகர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.ஓசூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான பிரம்மாண்ட செட்டுகள் அமைத்து விநாயகர் வழிபாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஓசூர் ஸ்ரீநகர் பகுதியில் நண்பர்கள் குழு சார்பில் காவல் நிலையம் போல பிரம்மாண்ட செட் அமைத்து விநாயகர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முழுக்க முழுக்க காவல் நிலையம் போல அந்த பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்குள் முகப்பு வாசலில் இரண்டு காவலர்கள் விநாயகர் வேடத்தில் நிற்பது போலவும் அதன் அருகில் காவலர்கள் ஏறி செல்லும் ஜீப் நிற்பது போலவும் செட் அமைக்கப்பட்டு உள்ளது. காவல் நிலையத்திற்கு உள்ளே சென்றால் இடது புறம் எழுத்தரும் வலது புறம் ஒரு ஏட்டும் விநாயகர் சிலைகள் வடிவத்தில் காவல் நிலையத்திற்கு வருவோரை வரவேற்பது போலவும் அதன் அருகில் இரண்டு சிறைகள் உள்ளது போலவும் அதில் எலிகள் சிறைக்குள் அடைபட்டு இருப்பது போலவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பால கணபதி விநாயகர் மக்களுக்கு காட்சியளித்து அருள் பாலிப்பது போல செட் அமைக்கப்பட்டு உள்ளது.

இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் இந்த காவல் நிலைய விநாயகரை கண்டு ரசித்து செல்கின்றனர்.ஹைதராபாத் நகரில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் 6 லட்சம் ரூபாய் செலவில் சினிமா கலைஞர்களை கொண்டு இந்த பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் காவல்துறைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பொதுமக்கள் மத்தியில் போலீஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த செட் அமைக்கப்பட்டதாக ஸ்ரீநகர் நண்பர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

 

The post காவல்துறைக்கு மதிப்பளித்து நன்றி தெரிவிக்கும் காவல் ஆய்வாளர் விநாயகர் : ஒசூரில் காவல் நிலையம் போல பிரமாண்ட செட் அமைத்து விநாயகர் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Osur ,Vijayagar ,Osur Srinagar ,Vinayakar ,
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...