×

பிறந்தநாளில் பிரதமர் மோடி கோரிக்கை

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது 73வது பிறந்தநாளான நேற்று, கைவினைக் கலைஞர்களுக்கான பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை தொடங்கிவைத்து, யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார். பிரதமர் மோடிக்கு நேற்று 73வது பிறந்தநாள். இதையொட்டி, தச்சர், கொல்லர், குயவர், செருப்புத் தொழிலாளர்கள், தையல்காரர்கள், கொத்தனார்கள், முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளிகள் உள்ளிட்ட கைவினைஞர்களுக்கு கடன் உதவி வழங்கும் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி, ரூ.13,000 கோடி இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் வரை ஒன்றிய அரசு கடன் வழங்கும்.

மேலும், ரூ.5,400 கோடி செலவில் இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டரின் முதல் கட்டமாக யஷோபூமி மெகா மாநாட்டு மையத்தையும் அவர் திறந்து வைத்தார். உலகிலேயே மிகப்பெரிய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் உலகில் 32,000க்கும் மேற்பட்ட பெரிய கண்காட்சிகள், மாநாடுகள் நடக்கின்றன. இதுபோன்ற மாநாட்டிற்காக வருபவர்கள், சாதாரண சுற்றுலா பயணிகளை காட்டிலும் அதிக பணத்தை செலவிடுகின்றனர்.

எனவே மாநாட்டு சுற்றுலாவின் மதிப்பு ரூ.25,000 கோடிக்கும் அதிகமாகும். இவ்வளவு பெரிய தொழில்துறையில் இந்தியாவின் பங்கு ஒரு சதவீதம் மட்டுமே. இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை நடத்த வெளிநாடு செல்கின்றன. இப்போது இந்தியாவும் மாநாட்டு சுற்றுலாவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. பாரத மண்டபம், யஷோபூமி போன்றவை இதற்கான அடையாளங்களாகும். திரைத்துறையினர், தொழில்நிறுவனங்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்த மாநாட்டு மையங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். யஷோபூமி மாநாட்டு அரங்கை நாட்டின் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

பொதுமக்களும் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு தர வேண்டும். வரவிருக்கும் விநாயக சதுர்த்தி, தந்தேராஸ், தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களை வாங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய உள்ளூர் பொருட்களும் உலக சந்தைக்கு போக வேண்டாமா? எனவே உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்து உலகத்தரத்திற்கு உயர்த்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் காந்தி மற்றும் நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான்கான், ஷாருக்கான் உள்ளிட்ட திரைத்துறையினர் என பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

* மெட்ரோவில் பயணம்

டெல்லி மெட்ரோவின் ஏர்லைன் வழித்தடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரயில் நிலைய சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, அவர் மக்களோடு மக்களாக மெட்ரோவில் பயணம் செய்தார். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என ரயிலில் பயணித்த பலரும் பிரதமர் மோடியுடன் செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post பிறந்தநாளில் பிரதமர் மோடி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Modi ,New Delhi ,PM ,Yashobhoomi ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர்...