
மதுரை: ஒரு துளியாக இருந்தாலும் அது விஷம் தான் என்பதால் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலை விற்பனைக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த பிரகாஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற ரசாயனம் கலந்து தயாரித்த விநாயகர் சிலைகளை, கரைத்தால் நீர்நிலைகள் மாசடையும் என்பதால் விநாயகர் சிலைகளை விற்கக்கூடாது என பாளை போலீசாரும், வருவாய் துறையினரும் உத்தரவிட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் விற்பனையில் யாரும் தலையிடக்கூடாது, தடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்றுமுன்தினம் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்கள் சிலை விற்பனைக்கு தடையாக இருக்கக்கூடாது. எனவே, விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்கவும் தடை விதிக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் தாமிரபரணி அல்லது பிற நீர் நிலைகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது. சிலை விற்பனையை தடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும்’’ என உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நெல்ைல கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென பதிவுத் துறையில் முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் நேற்று பிற்பகல் அவசர வழக்காக விசாரித்தனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் படியே ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பே நச்சுப் பொருட்கள் கலந்து சிலைகள் செய்யக்கூடாது என உத்தரவு இருந்தாலும், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. ரசாயனம் கலந்த சிலைகளை நீர்நிலைகளில் கலப்பதால் தொண்டை புற்றுநோய் அதிகரிக்கும். விஷம் என்பது, ஒரு துளி விஷமாக இருந்தாலும், அதிகளவு விஷமாக இருந்தாலும் அது விஷம் தான். அமோனியம், பாதரசம் போல பிளாஸ்டர் ஆப் பாரிசும் ஒரு நச்சுப் பொருள்தான். இப்போது அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடிய மனுதாரர் ஏன், ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை எதிர்த்து வழக்கு தொடரவில்லை’’ என்றனர். பின்னர், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்ய அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
The post ஒரு துளியாக இருந்தாலும் அதுவும் விஷம் தான் பிளாஸ்டர் ஆப் பாரீஸில் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.