தர்மபுரி: காதலை கைவிட்டதால் வங்கி பெண் அதிகாரியுடன் சேர்ந்திருந்த படங்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி திருமணத்தை நிறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் கடத்தூர் புட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த 29 வயது பெண், சேலத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், கடத்தூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், நான் தினமும் வங்கிக்கு பஸ்சில் செல்வேன். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி வகுத்துப்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சரவணனுடன் (31) பழக்கம் ஏற்பட்டது. அவர் அரூரில் உள்ள தனியார் பைனான்ஸ் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். எங்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களாக சரவணன் மது அருந்திவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், அவரை விட்டு பிரிந்தேன். இருப்பினும் தொடர்ந்து அவர் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இந்நிலையில், எங்களது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனை அறிந்த சரவணன், என்னைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யக் கூடாது, மீறி நடந்தால் நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைப்பேன் என மிரட்டினார். அதேபோல், என்னை பார்க்க வந்த மாப்பிள்ளைகளுக்கு படங்களை அனுப்பியதால் 2 முறை திருமணம் நின்றுவிட்டது. மேலும், எனது பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி, நாங்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு சரவணனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காதலித்தபோது சேர்ந்திருந்த படத்தை அனுப்பி வங்கி பெண் அதிகாரி திருமணம் நிறுத்தம்: பைனான்ஸ் ஊழியர் கைது appeared first on Dinakaran.
