×

ஊரெல்லாம் மழை பெய்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் புத்தன்தருவை குளம்-சடையநேரி நிரந்தர கால்வாயாகுமா? விவசாயிகள் கவலை

சாத்தான்குளம் : ஊரெல்லாம் மழை பெய்த போதும் தண்ணீர் வரத்தின்றி புத்தன்தருவை குளம் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம்,  சாத்தான்குளம் ஒன்றியம் தட்டார்மடம் பகுதியில் புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்கள் உள்ளன. இந்த குளங்கள் நீர்ப் பிடிப்பு  குளங்கள்  என்றாலும் சாத்தான்குளம் ஒன்றியத்தில் 18க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பெறுவதுடன்  விவசாயத்துக்கு பயன்பெறும் வகையில் உள்ளது. இந்தக் குளம் நிரம்பினால் தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் ஆண்டு முழுவதும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்வதுடன் விவசாயமும் நடைபெறும். இப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உவர்ப்பு தண்ணீராக மாறிப் போனது. இதனால் இக்குளத்துக்கு ஆண்டுதோறும் தண்ணீர் நிரப்பி உவர்ப்பு தன்மை மாற நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இக்குளத்துக்கு நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் குளம் நிரம்பி கடக்குளம்  வழியாக மழை நீர் வரும் வகையிலும், மருதூர் அணைக்கட்டு வழியாக சடையனேரி கால்வாய் வழியாகவும் தண்ணீர் வரத்து உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக வடக்கு பகுதியில்  உள்ள குளங்கள் நிரம்பி உள்ளன. தாமிரபரணி ஆற்றில் வைகுண்டம் அணைக்கட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான கனஅடி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மருதூர் மேலக்கால் வழியாக சடையனேரி  கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் மெஞ்ஞானபுரம் அடுத்துள்ள நங்கை மொழி பகுதிக்கு வந்து சடையனேரி, புத்தன்தருவை  பகுதிக்கு  வந்து கொண்டுள்ளது. ஆனால் இன்னும் புத்தன்தருவை, வைரவம் தருவை வந்து சேரவில்லை. புத்தன்தருவை குளத்துக்கு எந்த பகுதியில் இருந்தும் தண்ணீர் வரத்து இல்லாததால் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இக்குளத்தின் நீரை நம்பி அப்பகுதியில் வாழை, முருங்கை மற்றும் நெல்  பயிரிடப்பட்டு விவசாயிகள் தண்ணீருக்காக  காத்திருக்கின்றனர். ஆதலால் கடலுக்கு வீணாகச்  செல்லும் தண்ணீரை சடையனேரி கால்வாயில் திறந்து விட்டு புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் விரும்புகின்றனர்.இதுகுறித்து புத்தன்தருவை விவசாயி கிருஷ்ணன் கூறுகையில் ‘‘புத்தன்தருவை குளம் இப்பகுதி விவசாயிகளின்  ஆதார குளமாக விளங்குகிறது. இக்குளம் ஆண்டு தோறும் நிரம்பினால் இப்பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்து  நல்ல  நீர் கிடைக்கும் நிலை  உள்ளது. இக்குளத்துக்கு முழுமையாக  தண்ணீர் வராததாலும், இப்பகுதியில் எதிர்பார்த்த மழை இல்லாமலும் போனதால் கடும் வறட்சி நிலை தொடர்கிறது. இப்பகுதி தண்ணீர் உவர்ப்பு தண்ணீராக  மாறியதால் லாரி தண்ணீர் வாங்கிதான் மக்கள் குடிக்க பயன்படுத்தி வருகின்றனர். அதில் குடம் ரூ.8 வரை விற்கப்படுகிறது. லாரி தண்ணீர் ஒரு டேங்க் ரூ.1200 வரை விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இக்குளத்துக்கு ஓரளவு தண்ணீர் வந்து சேர்ந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இக்குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் இக்குளத்து நீரை நம்பி பயிரிடப்பட்ட வாழை, நெல் விளைச்சல் பாதிப்பு ஏற்படும்  நிலை உருவாகியுள்ளது. எனவே சடையனேரி கால்வாயை  நிரந்தர கால்வாயாக மாற்றி சடையனேரி, புத்தன்தருவை குளத்துக்கு 1500 கன அடி தண்ணீர் வரும் வகையில் கால்வாயை பராமரித்து ஆண்டு தோறும் தண்ணீர் விட்டு புத்தன்தருவை குளத்தை நிரப்பிட  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளநீர் கால்வாய் பணியையும் விரைந்து முடிந்து இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும்’’ என்றார்….

The post ஊரெல்லாம் மழை பெய்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் புத்தன்தருவை குளம்-சடையநேரி நிரந்தர கால்வாயாகுமா? விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Buddhantaruwai Kulam-Sadayaneri ,Satanakulam ,Buddhantaruwai pond ,Buddhantaruwai ,Dinakaran ,
× RELATED சாத்தான்குளம் அருகே குடிநீர் பிரச்னை...