×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயற்கை முறையில் 33 முட்டைகளை அடைகாக்கும் நெருப்புக்கோழிகள்: 15 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும்

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 17 நெருப்புக்கோழிகள் உள்ளன. அதில் 2 ஆண், 5 பெண் நெருப்புக்கோழிகள் ஆகும். மேலும், 10 நெருப்புக்கோழிகள் இன்னும் வளரவேண்டி உள்ளதால் அவற்றின் இனம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. தற்போது, பூங்காவில் உள்ள நெருப்புக்கோழிகள் 33 முட்டையிட்டுள்ளது. அவை குஞ்சு பொரிப்பதற்காக அடைகாத்து வருகின்றன. மேலும், நெருப்புக்கோழிகளின் முட்டையில் இருந்து குஞ்சு வெளியே வர சுமார் 42 நாட்கள் ஆகும். அதிக அளவில் முட்டைகள் இருந்தாலும் அதில், 6 அல்லது 8 முட்டைகளில் இருந்து மட்டுமே நெருப்புக்கோழி குஞ்சு பொரிக்கும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ளவை வீணாகிவிடும் என்பதால் நெருப்புகோழிகளின் முட்டை மற்றும் செயல்பாடுகளை பூங்கா ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் மணிகண்டபிரபு கூறுகையில், இதற்கு முன்பு மிஷின் மூலம் குஞ்சு பொரிக்கப்பட்டு வந்தன. தற்போது முதன் முறையாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இயற்கை முறையில் குஞ்சு பொரிப்பதற்காக கோழிகள் அடைகாத்து வருகிறது. இதில், நெருப்புகோழிகளின் இனப்பெருக்கத்திற்கு சென்னையில் உள்ள தட்பவெப்ப நிலையே முக்கிய காரணம். சென்னையில் ஆண்டின் பெரும்பகுதி நிலவும் வறண்ட தட்பவெப்ப நிலைகள் இவற்றிற்கு மிகவும் ஏற்றது. நெருப்புக்கோழி பராமரிப்புகள் அதிகம் உள்ள ஒரு பறவை ஈரப்பதத்தை விரும்பாது.

இதற்கு நல்ல காய்ந்த மணல் பரப்பைக்கொண்டு இருக்க வேண்டும். இயற்கையாக இனப்பெருக்கம் செய்ய தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிட்ட பராமரிப்பு நடைமுறைகள் தேவை என்பதால் நெருப்புகோழிகள் பறக்க முடியாது. இது பறவை என்பதால் அவை சுதந்திரமாக பறப்பதற்கு போதுமான இடம் தேவை. தற்போது மழையும், குளிருமாய் இருப்பதால் அதன் முட்டைகள் பொரிக்க தாமதமாகிறது. எனவே, அதற்கான வெப்பம் குறையாத வகையில் முட்டைகளை பாதுகாத்து வருகிறோம். ஆனாலும், இன்னும் 15 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் இயற்கை முறையில் 33 முட்டைகளை அடைகாக்கும் நெருப்புக்கோழிகள்: 15 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,CHENNAI ,Vandalur Arinagar Anna Zoo ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை